விதிமீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு... விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் ?
விதிமீறி பட்டாசு வெடித்தவர்களில் விழுப்புரம் மாவட்டத்தில் 17 பேர், புதுச்சேரியில் 63 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாட்டை மீறி பொது இடத்தில் பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடினர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தங்களது தீபாவளி வாழ்துகளை பறிமாறிக்கொண்டனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு இனிப்பு,காரம்,முறுக்கு,அதிரசம் வகைகளை பறிமாறிக்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தவகையில் பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாட்டைமீறி பட்டாசு வெடித்தால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாட்டை விதித்து காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென அரசு தரப்பில் தெரிவித்திருந்தனர். விதி மீறுவோர் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், சிலர் தடையை மீறி, நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் பட்டாசு வெடித்ததால், அவர்கள் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர். அதன்படி மாவட்டம் முழுதும் திண்டிவனம், மரக்காணம், வானூர், ஆரோவில் உள்ளிட்ட காவல் நிலையத்தில் 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். மேலும், தீபாவளி தினத்தில் செஞ்சி, அன்னியூர், திருவெண்ணெய்நல்லுாரில் இரண்டு இடங்கள் என 4 இடங்களில், பட்டாசு வெடித்த போது, ஒரு வைக்கோல் போர், 3 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது சேதமானது.
புதுச்சேரியில் 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், பள்ளிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. நேர கட்டுப்பாட்டை மீறி மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி, லாஸ்பேட்டையில் 9 பேர், அரியாங்குப்பம் 6, ரெட்டியார்பாளையம் 4, மேட்டுப்பாளையம் 3, காரைக்கால் டவுன் ஸ்டேஷனில் 5, கிருமாமம்பாக்கம் 3, திருநள்ளார் 3, கோட்டுச்சேரி 3 பேர் மீதும், கோரிமேடு, சேதராப்பட்டு, நெட்டபாக்கம், திருபுவனை, திருக்கனுார், வில்லியனுார், மங்கலம், முத்தியால்பேட்டை, தவளக்குப்பம், பாகூர், டி.ஆர்.பட்டினம், நிரவி ஆகிய காவல் நிலையத்தில் தலா 2 பேர் வீதம் மொத்தம் 63 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.