Tiruvannamalai: 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்கு உள்ளே அனுமதி - மகிழ்ச்சியில் மக்கள்
80 ஆண்டுகளுக்குப் பிறகு தென் முடியனுர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் அறநிலைத்துறை துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் அதே ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்களை ஆலயம் உள்ளே செல்வதற்கு கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கப்பட வில்லை. தற்போது பொங்கல் தினத்தன்று இந்த கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைப்பெற்றது. இந்த திருவிழாவில் அந்த சமூகத்தைச் சேர்ந்தர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒருநாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஊர்பகுதி மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர்கள் திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறை துறையில் கோவிலின் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களை அனுமதிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதன் அடிப்படையில் இன்று இந்து சமய அறநிலைத்துறை துறையினர் அவர்களை கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதித்து, கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது, கோவிலுக்கு உள்ளே செல்லாம் என்று கூறியுள்ளனர். இதனால் ஊர்பகுதி மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று கிராமத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தற்போது அவர்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இடையே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்து அறநிலை துறை இணை ஆணையர் அசோக் குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா மற்றும் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் டி ஐ டி முத்துசாமி ஆகியோர் தென்முடையனுர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பு வந்தனர். மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட ஊர் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறுகையில்; இந்தக் கோவில் என்பது அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டது. இந்து சமய அறநிலைக்கு சொந்தமான கோவில், இந்த கோவிலில் அனைத்து தரப்பினரும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய முழு உரிமை உண்டு. எனவே ஊர் மக்கள் அனைவரும் சமாதானமாக ஒருங்கிணைந்து கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். இல்லையென்றால் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான கோவிலை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஜாதி மதம் பேதம் இன்றி பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலில் எந்த நேரமும் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் காவல்துறை தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் கூடைகளுடன் மலர் மாலைகள் மற்றும் அபிஷேகப் பொருட்களுடன் காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலமாக கோவில் அருகே வருகை தந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முன்னிலையில் டிஐஜி முத்துசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கடந்த இரண்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்த முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கினர்.முதலில் அவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முத்துமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு முத்துமாரியம்மனை கண்டு தரிசனம் செய்து கோவிலில் வலம் வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் சில நாட்கள் ஊர் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதுகுறித்து பட்டியலின சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு மேலாக நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யாமல் இருந்துள்ளோம். கோவிலுக்கு சென்றால் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரிகள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் விரட்டி கடுமையாக திட்டியுள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஒத்துழைப்பால் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” எனத் தெரிவித்தனர்.