பாரத் பந்த்: திருவண்ணாமலையில் நிற்காமல் சென்ற ரயில் - அலறி அடித்து ஓடிய விவசாயிகளால் பரபரப்பு
’’திருப்பதி - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்ய சென்றபோது ரயில் நிற்காமல் வேகமாக வந்ததால் தண்டவாளத்தில் உக்கார சென்ற விவசாயியிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்’’
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், மத்திய அரசு உடனடியாக இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நாடு முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி அருகே களம்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மின்சார திருத்த சட்டம் மசோதா 2020 திரும்ப பெறக் கோரியும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமையில் களம்பூர் ரயில் நிலையத்தில் திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர் விவசாய சங்கத்தினர் பயணிகள் ரயிலை மறித்ததால் விழுப்புரம் செல்லும் திருப்பதி ரயில் 5 நிமிடம் தாமதமாக சென்றது.
அதே போன்று வந்தவாசி தபால் அலுவலகம் முன்பாக வயல்வெளிகளில் மாடுகளை வைத்து ஏர் உழுவது போன்று தார் சாலையில் ஏர் உழுவது போல நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், விலைவாசியை கட்டுபடுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வந்தவாசி தேரடி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அண்டம்பள்ளம் பகுதியில் மத்திய ரயில்வே நிலையத்தில் ரயிலை மறித்து ரயில் மறியிலில் ஈடுப்பட சென்ற விவசாய சங்கத்தினர் அங்கு வந்த அப்போது திருப்பதி - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்ய சென்றபோது ரயில் நிற்காமல் வேகமாக வந்ததால் தண்டவாளத்தில் உக்கார சென்ற விவசாயியிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக சாலை மறியல், மற்றும் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.