மேலும் அறிய
ஐஎஃப்எஸ் விவகாரம்: ட்விஸ்ட் வைத்த டிஎஸ்பி கபிலன் - அடுத்து சிக்கப் போவது யார் ? - முழு பின்னணி
ஐஎப்எஸ் இயக்குநர்கள் 4 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் டிஎஸ்பி கபிலனை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

டிஎஸ்பி கபிலன்
பல ஆயிரம் கோடியில் விளையாடிய நிறுவனம்
வேலூரை தலைமை இடமாகக் கொண்டு ஐஎப்எஸ் என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் கிளைகளை தொடங்கினர். இதன் பங்குதாரர்கள் மற்றும் சகோதரர்கள் லட்சுமி நாராயணன், தேவ நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் என 4 பேரும் , கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மாநிலம் முழுவதும் 89 ஆயிரம் பேரிடம், ரூ.5,900 கோடி ஐஎப்எஸ் நிறுவனத்தில் முதலீடு பெற்றனர். இதுவரை நேரடியாக புகார் அளித்தவர்களின் கணக்கு பட்டியல் 5900 கோடி என்றாலும், சுமார் 15 லிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை இந்த நிதி நிறுவனம் பெற்றதாக கூறப்படுகிறது.

வழக்கை விசாரித்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
இவ்வாறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில், எப்படி சரியாக செயல்பட்டு வருமோ அதே போல், இந்த நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென இந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சில மாதங்கள் பணம் தராமல் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பெரிய அளவில் நடந்த பொருளாதார மோசடி என்பதால் வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உத்தரவு
இதனை அடுத்து காவல்துறையினர் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள், இயக்குநர்களான லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் உட்பட 10 இயக்குநர்கள், 3 முக்கிய ஏஜென்டுகள் என மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் முக்கிய ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நிதி நிறுவனத்தின் 5 பங்குதாரர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை முடக்கி நடவடிக்கை
அதைதொடர்ந்து இந்நிறுவனத்தின் இயக்குனர், ஏஜென்ட் வீடுகள் என 31 இடங்களில் சோதனை நடந்தது. இதில், ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் தங்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏன் பிடிக்க முடியவில்லை
இந்தநிலையில், சமீபத்தில் துபாயில் வங்கியில் இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபு காத்திருந்து பணம் எடுப்பதைப் போன்ற காட்சி வெளியானது. ஆனாலும், இந்த மோசடி வழக்கில் ஏஜென்ட்டுகள் ஒருசிலரை மட்டுமே கைது செய்து, கணக்கு காட்டிய போலீஸார், அதன் இயக்குநர்களைப் பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற சர்ச்சையும் நீண்டுவந்தது. இந்தநிலையில் தான், ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க சுமார் 5 கோடி லஞ்சம் பெற்றதாக ஐஎஃப்.எஸ் ஏஜெண்டுகள் சிலர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
சிக்கிய டிஎஸ்பி கபிலன்
இதனையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஏஜென்ட்களின் வாக்குமூலத்தில் உண்மை இருப்பதை கண்டுபிடித்தனர். தற்பொழுது கபிலடனும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் அவருக்கு சொந்தமாக இருக்கும் வீட்டில் இருந்து சுமார் 25 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கபிலன் போலே சில பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் பணம் பெற்றதாக புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெலிகிராம் மூலம் தொடர்பு
துறை ரீதியில் நடைபெற்ற விசாரணையில், டிஎஸ்பி கபிலன் துபாயில் உள்ள மோகன் பாபு என்பவரிடம் டெலிகிராம் மூலம் வழக்கு தொடர்பாக சில ரகசியங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் இயக்குனர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கும் ஆரம்ப கட்டத்தில் கபிலன் உதவி செய்தது தெரியவந்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ஆருத்ரா நிதி நிறுவனத்தை விட அதிக அளவு முதலீடுகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடவடிக்கை என்பது ஆருத்ரா மீது அதிக அளவு இருந்ததாகவும், ஐஎஃப்எஸ் மீது நடவடிக்கை இல்லை என, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில் காவல்துறை உயர் அதிகாரியே, லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க உதவி செய்திருக்கும் சம்பவம் முதலீட்டார்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று வேறு யாராவது லஞ்சம் வாங்கி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணையை துவங்கியுள்ளனர் காவல்துறையினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்





















