Sorgavasal Thirappu: சொர்க்கவாசல் திறப்பு: திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வு சொர்க்கவாசல் திறப்பு நாளை 23 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை.
இதனால் கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார். முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார்.
மேலும், அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கபடுகிறது. இதனால் நாளை திருச்சி மாவட்டமே விழா கோலமாக காட்சியளிக்கும் ஆகையால் சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுவதால் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.