கஞ்சா விற்பனையின் தலைநகரமாகும் திருச்சி - ஓராண்டில் 260 பேர் கைது; 13 பேருக்கு குண்டாஸ்
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விறபனை செய்த 260 பேர் கைது, இதில் 13 பேர்கள் மீது குண்டாஸ் போடபட்டு சிறையில் அடைப்பு- திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் தலைநகரான திருச்சி மாறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா தடுப்பு காலத்தில் மதுபான கடைகளை மூடியதுதான். ஏன் என்றால், முழு ஊரடங்கு நேரத்தில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையானவர்களுக்கு மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை. இதனால் போதை ஆசாமிகள் கஞ்சா பக்கம் திரும்பினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சியில் கஞ்சா விறபனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கே.கே.நகர், ராம்ஜிநகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம், மன்னார்புரம், டோல்கேட், கோட்டை, போன்ற பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. நாளடைவில் கல்லூரி, பள்ளி இளைஞர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். போதைபொருட்களை கட்டுபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்து வருகிறார்கள். இநிலையில் மாநகர் முழுவதும் காவல்துறையினர் தனிபடை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் தினந்தோறும் கஞ்சா போன்ற போதைபொருட்களை பறிமுதல் செய்யபடுகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற கார்த்திகேயன், மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், மாநகரில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி மாநகரில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யக்ப்பட்டனர். இதில் கடந்த 2020ம் ஆண்டு திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 137 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்தாண்டு இதுவரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 260 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 13 பேர்வரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
மேலும் மாநகரில் உள்ள பள்ளிகள், அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்தும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் 5,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர். மேலும் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும் கஞ்சா வியாபாரிகளை கண்காணிக்க காவலர்கள், பள்ளி ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தகவல் அளிப்பவர்கள் என ஒருங்கிணைந்து வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கஞ்சா, போன்ற போதைப்பொருட்கள் விறபனை, கொலை, உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.