ஸ்ரீரங்கம் பகுதியில் அதிநவீன அறிவியல் தொழில் நுட்ப பூங்கா இம்மாதம் திறப்பு
ஸ்ரீரங்கம் அருகே பஞ்சக்கரை பகுதியில் 14.90 கோடி செலவில் அறிவியல், தொழில்நுட்ப, கணிதம், பொறியியல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அழகிய பூங்கா, இம்மாதம் மக்கள் பயண்பாட்டிற்கு வரவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், வணிக வளாகம் கட்டுதல், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், ரவுண்டானாக்களில் நீரூற்றுகள் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2020-21-ம் நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சியில் முதன் முறையாக ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் பிரமாண்டமான முறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித (STEM PARK) பூங்கா ரூ.14 கோடியே 90 லட்சம் செலவில் பணிகள் தொடங்கபட்டது. அந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் 3.66 ஏக்கரில் இந்த பூங்கா வடிவமைக்கப்படு வருகிறது. இயற்பியலுக்காக நோபல்பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த டாக்டர் சர்.சி.வி.ராமன் பெயரில் உருவாக்கப்படும் இந்த அறிவியல் பூங்காவில் பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியலின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் குறித்த பாடங்களின் நுணுக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையிலும் அறிவியல் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.
மே;லும் கல்வி சார்ந்து அமைக்கப்படும் இந்த பூங்காவில், சிறிய அரங்கம், 100 பேர் அமரக்கூடிய மினிதிரையரங்கம், பூங்கா நுழைவு வாயிலில் உணவகம் என பல்வேறு அம்சங்களுடன் இந்த பூங்கா கட்டமைக்கப்படுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டு பூங்காவுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் பூங்கா பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள சில பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த அழகிய பூங்காவை இம்மாதம் திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளனர். மேலும் இதுக்குறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது.. திருச்சி மாநகர மக்கள் மாலை நேரங்களில் காவிரி பாலத்தில் குழந்தைகளுடன் வந்து அமர்ந்து பொழுதைபோக்குகிறார்கள். இதனால் காவிரி பாலத்தில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகஅளவில் கூடுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பெறறோர் குழந்தைகளுடன் வந்து பொழுதை போக்கவும், அதேநேரத்தில் குழந்தைகளின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையிலும் அறிவியல் தொழில் நுட்ப, பொறியியல் மற்றும் கணித பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.
குறிப்பாக கடந்த ஆண்டே இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்ட போதும், கொரோனா தொற்று காரணமாகவும், யாத்ரிநிவாஸில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாலும் பூங்கா பணிகளை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் பூங்கா பணிகள் முடிவடைந்துவிடும். இந்த பூங்கா பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வண்ணமாக உருவாக்கபட்டுள்ளது என தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்