ஓசியில் பட்டாணி கேட்டு மிரட்டிய எஸ்ஐ - வைரலான வீடியோவால் சஸ்பென்ட் ஆன பரிதாபம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கேட்டு மிரட்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் - மாநகர காவல்துறை ஆணையர் காமினி நடவடிக்கை.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமணி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வாரம் தோறும் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.
மேலும் மாநகர் பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்களை முற்றிலும் தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாநகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென காவல் ஆளிநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வபோது பொதுமக்களிடையே காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை காவல்துறையினர் மிரட்டினாலும் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாணி கடை வியாபாரியை மிரட்டிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடை வைத்திருப்பவர் ராஜன். நேற்று இரவு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ராதா சிறப்பு உதவி ஆய்வாளர் பட்டாணி கடைக்கு சென்று பட்டாணி வேண்டும் என்று கடைக்காரரின் மகனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் எவ்வளவு வேண்டும் என்று கேட்ட பொழுது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்கு வந்து போலீசாரிடம், என் மகனிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நான் பணிபுரிகிறேன் எனக்கு பட்டாணி கேட்டால் கொடுக்க மாட்டங்கிறான் என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ராஜன் கடையிலிருந்து அவருக்கு பட்டாணியை கொடுத்து உள்ளார். அதையும் வாங்கி சென்றுள்ளார் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா.
இந்நிலையில் இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியது. முன்னதாக வியாபாரிகள் சங்கம் சார்பாக திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் ராஜன் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.