திருச்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
திருச்சி மாநகராட்சியில் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் சிவபாதம் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு.. திருச்சி மாநகராட்சியில் 850 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது வரை 650 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் போட நிதி பெறப்பட்டுள்ளது. அய்யாளம்மன் படித்துறை பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநகரில் ஓரிரு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் குடிநீர் வினியோகம் சீர்செய்யப்பட்டு விடும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து தெரிவிக்கலாம் என திருச்சி மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசியது.. முத்துச்செல்வம் (தி.மு.க.) :- நாம் கவுன்சிலர்களாக பொறுப்பேற்று ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறவில்லை. வருகிற 2-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில், ஒப்பந்த தாரர்கள் மேற்கொண்டுள்ள பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகளின் புள்ளிவிவரங்களுடன் வரும்படி கூற வேண்டும் என்றார். ரெக்ஸ் (காங்.):- 39-வது வார்டில் 90 சதவீதம் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளது. மக்களுக்கு தேவை சாலை வசதிதான். ஆனால் எனது வார்டுக்கு சாலை வசதி செய்து கொடுக்க நிதி ஒதுக்கவில்லை. கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் சாலை மிகவும் மோசமடைந்துவிட்டது. குறிப்பாக பாலாஜிநகர், வசந்தம்நகர் பிரதான சாலை, சேரன்நகர், சோழன்நகர் போன்ற பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை உடனே சரிசெய்து தர வேண்டும். காந்திநகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர்கால்வாய் அனைத்தும் தூர்ந்து விட்டது. எனவே அவற்றை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 65 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்களான காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ், ஜவகர், ம.ம.க. கவுன்சிலர் பைஸ் அகமது, வி.சி.க. கவுன்சிலர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் இது அரசின் கொள்கைமுடிவு. மற்ற மாநகராட்சிகளில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. அதனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிதான் ஆகவேண்டும் என்று மேயர் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேநேரம் அ.தி.மு.க. கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து கூட்டரங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.