திருச்சியில் போதை பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அதிரடியாக சீல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, இளைஞர்களை சீரழிக்கும் கூல்லிப், பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்தால் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்த பழக்கத்தால் பல்வேறு குற்றச் செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் போன்ற பல்வேறு தவறான வழிகளில் பல இளைஞர்கள் செல்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை காத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்கள் நலனை காக்கவும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட,"போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திடவும் புகையிலை பொருட்களினால் தயாரிக்கப்படும் போதை பொருட்களை விற்பளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் உத்தரவின்பேரில், 5 உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுடன் திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு கூட்டு சோதனை (Combined Raid) மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல்லிப், பான்மசாலா போன்ற குட்கா பொருட்களை கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீவாநகர், கலைஞர் அறிவாலயம் அருகில் தரைக்கடை, கொடமுருட்டி பாலம் அருகில் ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கந்தவேலு தலைமையில் 3 கடைக்கு சீல் வைக்கப்பட்டு, ஒரு கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முறையே கே.கே. நகர், காந்திமார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 4 கடை உரிமையாளருக்கு தலா ரூ.25,000/- அபராதம் விதிக்கப்பட்டு, பாலக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட கடைகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில், நடைபெற்ற கூட்டு சோதனை (Combined Raid) மேற்க்கொள்ளப்பட்டு நடவடிக்கையின் மூலம் திருச்சி மாநகரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 7 கடை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டும், ரூ.2,00,000/- அபராதம் விதிக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல்லிப், பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தும், கடைகளை சீல் வைத்தும், உரிமத்தை ரத்து செய்யவும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.