திருச்சி மாவட்டத்தில் பல கோடி வர்த்தகம் பாதிப்பு - முக்கியமான 3 சாலைகள் மூடல்
திருச்சியின் முக்கிய கடைவீதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகிறது. பல கோடி வர்த்தகம் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு.
திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் (Smart City Mission) குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதான சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள், சில்லறை வியாபாரம் மற்றும் வணிகங்கள் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்க வேண்டியுள்ளதால், மாநகராட்சி பொறியாளர்கள், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, சிங்காரத்தோப்பு வணிக சங்கத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் 19வது மாமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் முன்னிலையில் (04.03.2023) அன்று மாநகராட்சி அலுவலகத்தில் இது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி, இன்று முதல் (06.03.2023), (07.03.2023) மற்றும் (08.03.2023) ஆகிய மூன்று தினங்களில் சிங்காரத் தோப்பு தெருவில் சூப்பர் பஜார் முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை உள்ள அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகளை திறக்காமல் இருப்பதற்கு (04.03.2023) அன்று நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனால் இன்று(06.03.2023) முதல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எப்பொழுதும் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இப்பகுதியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நடைபெறுவதால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் 09.03.2023 முதல் கடைவீதி சாலைகள் திறக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இப்பணியினால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்