திருச்சியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் - 3000 பேர் பங்கேற்பு
திருச்சி மாநகரத்தை போதையில்லா மாநகரமாக மாற்ற வேண்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
திருச்சி மாநகரத்தில் காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக போதை பொருள் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கு தனிப் படைகள் அமைத்து அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும் தினந்தோறும் திருச்சி மாநகரத்தில் இயங்கி வரக்கூடிய அனைத்து கடைகளிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையும் பல்வேறு தன்னார்வர்கள் தொண்டு நிறுவனமும் இணைந்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதே சமயம் பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோம் இது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் இல்லாத திருச்சி மாநகரம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி திருச்சி மொராய்ஸ் சிட்டி மற்றும் மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாம் ஆண்டு போட்டி இன்று காலை நடைபெற்றது. திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள மாணவர்கள் சாலையில் இருந்து இந்த மாரத்தான் போட்டியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் அன்பு, மொராய்ஸ் சிட்டி நிர்வாக இயக்குனர் லெரோன் மொராய்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாஸ்டர் பெண்கள் பிரிவு, ஆண்கள் பிரிவு, பள்ளி மாணவிகள் பிரிவு, மாணவர்கள் பிரிவு, சீனியர் பெண்கள் பிரிவு, சீனியர் ஆண்கள் பிரிவு, கல்லூரி மாணவிகள் பிரிவு, கல்லூரி மாணவர்கள் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாரத்தான் ஓட்டம் நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக மொராய்ஸ் சிட்டி, மொராய்ஸ் கிளாரியானில் முடிவடைந்தது. இதில் மாஸ்டர் பெண்கள் பிரிவில் லதா, கோகிலா, பிரியா, ஆண்கள் பிரிவில் டாக்டர் வினோத், ஆல்பர்ட் வில்லியம், கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மேலும், பள்ளி மாணவிகள் பிரிவில் யுவா, சதா, லலிதா, மாணவர்கள் பிரிவில் விகேஷ் ராஜ், லோகேஸ்வரன், ரோஹித், சீனியர் பெண்கள் பிரிவில் யாழினி, சரண்யா, மாலதி, ஆண்கள் பிரிவில் ரங்கராஜ், சந்தோஷ் குமார், கவியரசன், கல்லூரி மாணவிகள் பிரிவில் வைஷ்ணவிகா, மரியம்மாள், வினோதினி, ஆண்கள் பிரிவில் லட்சுமணன், செல்வேந்திரன், ரவிவர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு மொராய்ஸ் சிட்டி சார்பில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 , 2ம் பரிசாக 10 ஆயிரம் , 3ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 3000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.