Crime: 8 பேரை ஏமாற்றி திருமணம்.... பணம், நகை மோசடி.. திருச்சி அருகே திருநங்கை கைது
வளநாடு அருகே கைது செய்யப்பட்ட திருநங்கை 8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (வயது 30). திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக சுற்றுச்சுவரும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் ரூ.10 லட்சத்தை பபிதா ரோஸ் வாங்கி பண பரிவர்த்தனையும் பெற்றுள்ளார். இதனால் தனக்கு வர வேண்டிய மொத்தம் ரூ.21 லட்சத்தை பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட முருகேசன் இது தொடர்பாக வளநாடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோசை தேடி வந்தனர். இதேபோல் திருநங்கை வீட்டில் தச்சு வேலை செய்த ஜார்ஜ் ஆண்டணி தனக்கு ரூ.1½ லட்சம் தராமல் மிரட்டல் விடுப்பதாகவும் வளநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தன்மீதான புகார்கள் குறித்து தகவலறிந்த திருநங்கை பபிதாரோஸ் தலைமறைவானார். இந்தநிலையில், துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பபிதா ரோசை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவர தொடங்கியது.
திருநங்கை தான் ஒரு சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு என்றும், சப்-கலெக்டராக பணிபுரிகிறேன். தனது சகோதரர்கள் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் திரைப் படத்துறையில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்களிடம் ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்துள்ளார். இதுவரை 8-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர்களது குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவதாக அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தால் மானம்போய்விடும் என கருதி புகார் தராமல் இருந்துள்ளனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பபிதா ரோஸ் தொடர்ந்து கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக பணி புரிந்து வரும் கார்த்திக்கின் மனைவி நித்யா கடந்த 17-ந் தேதி திருநங்கையால் பாதிக்கப்பட்ட சிலருடன் திருச்சி மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுஜித்குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து, மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் திருநங்கை பபிதா ரோஸை விசாரணைக்கு அழைத்தபோது இரவு ஆகிவிட்டதால் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் 19-ந்தேதி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வரும் காவலர் கார்த்திக் தன்னை திருமணம் செய்து அடித்து துன்புறுத்தி 110 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சத்தை பறித்துக் கொண்டதாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் திருநங்கை புகார் மனு அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. எனவே பபிதா ரோசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியே வரும் என போலீசார் தெரிவித்தனர்.