சகோதரி மரணச்செய்தி கேட்டு உடைந்து அழுத தனலட்சுமி.. மகளின் கனவுக்காக துயரை மறைத்த தாயின் தியாகம்..!
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற தடகள வீராங்கனை தனலட்சுமி குடும்பத்தில் நேர்ந்த சோகம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற தடகள வீராங்கனை தனலட்சுமி குடும்பத்தில் நேர்ந்த சோகம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர் - உஷா தம்பதிக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் காயத்திரி, இரண்டாவது மகள் கஸ்தூரி, மூன்றாவது மகளாக தடகள வீராங்கனை தனலட்சுமி பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தனலட்சுமிக்கு தனது சிறு வயதில் இருந்தே விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதை அறிந்த அவரது தந்தை சேகர் விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பல கோப்பைகளையும், பதக்கங்களையும், குவித்தவர் தனலட்சுமி.
மாவட்ட ,மாநில, தேசிய, அளவிலான தடகள போட்டிகளில் கலந்துகொண்ட தனலட்சுமி பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார்.இதனை தொடர்ந்து தாய் உஷா கூலி வேலைக்கு சென்றும், ஆடு, மாடு வளர்த்தும் , தனலட்சுமியை விளையாட்டு ஆர்வத்துக்கு உறுதுணையாக இருந்து வந்தார். தனலட்சுமியின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக ஒலிம்பிக் போட்டியில் தேர்வானார். ஒலிம்பிக் போட்டியில் 400× 400 ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தனலட்சுமி தெரிவித்தார். நாட்டுக்காக நிச்சயம் பதக்கங்களை பெற்று தருவேன் என்ற உறுதியோடு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தனலட்சுமி புறப்பட்டுச் சென்றார். அதேநாளில் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரி உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
”இலட்சியமும் ,கனவும் நிறைவேற்ற சென்றாள் தனலட்சுமி, ஆவளுடைய சகோதரியின் ஆசையும் அதுவே என்பதாலும் மூத்த மகள் மறைவு செய்தியை தனலட்சுமிக்கு தெரிவிக்கவில்லை” என்று தாய் உஷா கலங்கினார். தனலட்சுமி இரண்டாவது சகோதரியான கஸ்தூரி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அந்த சோகம் இன்னும் முழுமையாக தீராத நிலையில் தனது மூத்த சகோதரியும் தற்போது இறந்ததால் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் தனலட்சுமி. நாட்டுக்கு பெருமை சேர்த்த தனலட்சுமி இன்று தீராத துயரத்தில் இருக்கிறார்.
தனலட்சுமிகள் பெரும் விலைகளைக் கொடுத்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கிறார்கள். நாம் திருப்பிச் செய்யவேண்டிய கடமைகள்தான் காத்திருக்கின்றன. வந்தனா கட்டாரியாக்களும், தனலட்சுமிகளும், மீராபாய் சானுக்களும் வறுமையையும், சமூக ஒடுக்குமுறைகளையும் தாண்டி தங்களின் அர்ப்பணிப்பையும், நாட்டுக்கான தங்களின் நேசத்தை தவறாமல் தருகிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையையும், அந்த தங்க உழைப்புக்கான பலனையும் செலுத்துவதற்கான கடப்பாடு சமூகத்துக்கும், அரசுக்கும் உள்ளது.