(Source: ECI/ABP News/ABP Majha)
’திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்’ நடவடிக்கை எடுக்கத் தயங்கும் கல்லூரி கல்வி இயக்ககம்..!
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. மேலும் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி கல்வி இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும் என சக மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் ஆங்கிலத் துறையில் எம்.ஏ. படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்., முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இது தொடர்பாக புகார் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அனுப்பியுள்ளார். புகாரைத் தொடர்ந்து முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து இப்புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரி முதல்வருக்கு கடிதம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் இதற்கான குழு அமைத்து விசாரணை நடத்தியதாகவும், விசாரணையில் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயக்குமார் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை கடந்த 03.08.2022ம் தேதி தாக்கல் செய்துள்ளார். மேலும் கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் ஜெயக்குமார் மீது ஸ்டெல்லா என்ற பெயரில் புகார் கடிதம் வந்ததாகவும், ஆனால் ஸ்டெல்லா என்கிற பெயரில் மாணவிகள் யாரும் அத்துறையில் பயிலவில்லை என்றும் தகவல் வந்துள்ளது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஆங்கில துறையில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெயக்குமார் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக எஸ்சி, ஒசி, பிசி பேராசிரியர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டதில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்து குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த 3 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து கல்லூரியின் பெயரையும் அரசின் பெயரையும் காக்கும் வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் எப்பொழுதும் போல் கல்லூரிக்கு வந்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார் என மாணவிகள் குற்றச்சாட்டு. இந்நிலையில் குற்றம்சாட்டபட்ட பேராசிரியர் ஜெயக்குமார் நான் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டை தன் மீது சுமத்துவதாகவும், அனுபவம் வாய்ந்த தனக்கு பணி உயர்வு கிடைக்க உள்ள நிலையில் அது கிடைக்காமல் இருப்பதற்காக இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்படுவதாக கூறினார். ஆனால், பேராசியர் ஜெயகுமார் மீது யார் புகார் கொடுக்க வந்தாலும் அவர்களிடம என்னை சாதிய ரீதியாக பெயரை சொல்லி மிரட்டியதாக புகார் தெரிவித்து உங்களை கைது செய்ய வைப்பேன் என்று மிரட்டுவதாகவும் அந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெண் விடுதலையை முன்னிறுத்தி பல போராட்டஙக்ளை முன்னெடுத்த பெரியார் பெயரிலுள்ள அரசு கல்லூரியில் பேராசிரியர் மாணவியரிடம் பாலியல் துன்பறுத்தலில் ஈடுபட்டதாக புகாரை மாணவிகளே கடிதம் எழுதி கையெழுத்துட்டு முதல்வருக்கு அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. விசாரணையில் பேராசிரியர் ஜெயகுமார் செய்த தவறு நிரூபணமான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது