மேலும் அறிய
புதுக்கோட்டையில் 15 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு; 60 லட்சம் ரூபாய் வசூல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாட்டில் நடந்த மொய்விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் ரூ.60 லட்சம் வசூல் ஆனது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மும்முரமாக மொய் விருந்துகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் ஆனி மாதத்திலேயே மொய் விருந்து விழா துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வடகாடு பகுதியிலும் மொய் விருந்து விழா தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வடகாடு பகுதியில் 15 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்து விழாவில் சுமார் ரூ.60 லட்சம் வரை மொய் பணம் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின் கோர தாண்டவத்தாலும், அதற்கு அடுத்து கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பெரும் தாக்கத்தாலும் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, கோடிகளில் வசூல் நடைபெற்று வந்த மொய் விருந்து விழாக்கள் தற்போது லட்சங்களை மட்டுமே ஈட்டி தரும் நிலையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய பொருளாதார பின்னடைவு குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதிகளில் அதிக அளவில் தென்னை, பலா, வாழை, எலுமிச்சை மற்றும் மலர் சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆனால் அவற்றிற்கான உரிய விலையின்றி விவசாயிகள் முதல் அனைவருமே கடும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய விலை வீழ்ச்சியும், மொய் பணம் வசூல் குறைவாக இருப்பதற்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மொய் விருந்து விழாக்கள் மூலமாக, சமையல் கலைஞர்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை, சமையல் பாத்திரங்கள், திருமண மண்டபம், ஆட்டிறைச்சி, வாழை இலை, மொய் பணம் வசூல் எழுத்தர்கள், பணியாளர்கள் இப்படி ஏராளமானோர் இதன் மூலமாக அதிக பயன்பாடு பெற்று வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒருவர் மொய் விருந்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும் போன்ற விதிமுறைகள் உண்டு. மேலும் குறைந்த பட்சமாக 15 முதல் 25 நபர்கள் வரை கூட்டு சேர்ந்து மொய் விருந்து விழாக்கள் நடத்துவதால் செலவு தொகை குறைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் வீழ்ச்சி கண்ட நிலையில் இருந்து வருவதால் மொய் விருந்து விழா சற்றே களையிழந்து காணப்பட்டாலும், வரும் காலங்களிலாவது விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்படும் பொருட்டு மொய் விருந்து விழாக்கள் அதிக அளவில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion