நடிகர் விஜய் எங்களுக்கு எப்போதும் அன்புள்ள அண்ணன், மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கட்சிக்கு பெயர் வைப்பது அவரது சொந்த எண்ணங்கள், அவரது கொள்கைகள் வெளியே வரும் போது தான் நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி renaissance in sports என்கிற தலைப்பில் பன்நோக்கு கருத்தரங்கம் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் வருகின்ற 7ம்தேதி முதல் துவங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம் குறித்து தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: வரும் 7ம் தேதி துவங்க உள்ள இந்த கருத்தரங்க நிகழ்வை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். குறிப்பாக விளையாட்டு துறையில் உள்ள சவால்கள் என்ன ? அதனை எப்படி நாம் வெல்வது என்று பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர்.
நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன கேள்விக்கு ?.. பதில் அளித்த அவர், நடிகர் விஜய் அன்பான அண்ணன். நீங்கள் நடிகராக பார்க்கலாம் ,கட்சி தலைவராக பார்க்கலாம் எங்களுக்கு அவர் எப்போதும் அன்புள்ள அண்ணன் தான் என்றார். மேலும், மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
திராவிட என்கிற வார்த்தை இல்லை என்கிற கேள்விக்கு?? பதில் அளித்த அவர், கட்சி ஆரம்பம் என்பது அவரது சொந்த விருப்பம் , பெயர் வைப்பது என்பதும் அவர்களது சொந்த எண்ணங்கள். அவர்களது கொள்கை எல்லாம் வரும் போது தான் எந்த அர்த்தத்தில் பெயர் வைத்தார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர்தான் வேட்பாளர், எனக்கு இந்த தொகுதியை கொடுங்கள் என்று யாரும் என்னிடத்தில் வரக்கூடாது என்று தலைவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். கட்சியின் எல்லா முடிவையும் முதலமைச்சர் மட்டுமே எடுப்பார். தொகுதியில் திமுக தான் போட்டியிட வேண்டும் என்று கூறுவது குறித்த கேள்விக்கு ?? எங்களது கட்சியை நாங்கள் எப்படி விட்டு தர முடியும்,ஆனால் எது எப்படி இருந்தாலும் முடிவு என்பதனை கட்சித் தலைவர் மட்டுமே எடுப்பார்.