திருச்சி: கணவன் - மனைவி தற்கொலை! அநாதையாக நிற்கும் 8 வயது மகன்! - காரணத்தை விசாரிக்கும் காவல்துறை!
திருச்சி அருகே மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கினர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த மணமேடு சிவானந்தா பள்ளிக்கூடம் அருகே வசித்து வந்தவர் குமாரசாமி (வயது 39), டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (35). இவர்களுக்கு 8 வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். குமாரசாமி, அப்பகுதியில் வாடகைக்கு வாகனங்களை இயக்கி வந்தார். காலையில் பணிக்கு செல்லும் குமாரசாமி, இரவில்தான் வீடு திரும்புவார். வழக்கம் போல் நேற்று முந்தினம் பணிக்கு சென்ற குமாரசாமி சற்று முன்னதாக மாலையிலேயே வீடு திரும்பினார். பின்னர் மகன் மணிகண்டனுடன் சிறிது நேரம் விளையாடிக்கொண்டு இருந்தார். இரவு குடும்பத்துடன் அழகரை அக்ரஹாரப் பகுதியில் வசித்து வரும் தன் தந்தை ஜெகதீசன் வீட்டுக்கு மனைவி, மகனுடன் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்த பிறகு அங்கேயே தூங்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று ஜெகதீசன் வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் குமாரசாமியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த ஜெகதீசன் மகன், மருமகள் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டு கதறி அழுதனர். பின்னர் அவர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆசைத்தம்பி, நல்லதம்பி மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த தம்பதியினர் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குமாரசாமிக்கு தொழில் நஷ்டம் ஏதாவது ஏற்பட்டதா, பெண் தகராறில் தம்பதியினர் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்