திருச்சி அருகே அரசு சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி, 25 பேர் காயம்
திருச்சி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலியானார், 25 பேர் படுகாயம் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து படுக்கை வசதி கொண்ட அரசு குளிர்சாதன சொகுசு பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தில் 4 சிறுவர்கள் உள்பட 39 பயணிகள் மற்றும் டிரைவர் ராகவன் (வயது 45), கண்டக்டர் சுரேஷ் (41) என 41 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சியை அடுத்த வாத்தலை அருகே திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சக்கோரை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, வளைவில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அபயகுரல் எழுப்பினர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஒசூர் அவளப்பள்ளி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் அய்யாதுரை பாண்டியன் (53), சங்கர் (32), ஹரிஸ் (21), ஐசக் (54), ஜாவீத்ரோஷன் (34), பைசல் உள்பட 26 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அவளப்பள்ளி பகுதியை சேர்ந்த ஸ்டீபன் அய்யாதுரை பாண்டியன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் பேருந்தை அப்புறப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்தை போலீசார் அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நெ.1 டோல்கேட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி வரை சுமார் 72 கிலோமீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலையானது குறுகிய சாலையாக உள்ளதால் இந்த பகுதிகளில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து உயிர் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக நெ.1 டோல்கேட் - முசிறி வரை உள்ள சாலைகளில் வாரத்திற்கு ஒரு விபத்தாவது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து அதிகாலை இருள் சூழ்ந்த நேரத்தில் வரும்போது வளைவு இருந்தது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க உடனடியாக இருள் சூழ்ந்த பகுதியில் இரவில் ஒளிரும் மின் விளக்குகள் அமைத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும் சாலையை அகலப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்