மேலும் அறிய
Advertisement
புதுக்கோட்டை ஆட்டுசந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாக வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறினர்.
தமிழகத்தில் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகரிப்பது வாடிக்கையான ஒன்றாகும். இதற்காக பல்வேறு ஊர்களில் கால்நடை சந்தைகள் கூட்டப்படும். அவ்வாறான காலங்களில் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர் தங்களது ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகள் களை கட்ட தொடங்கியுள்ளன. ஆன்மீக மாதங்களாக கருதப்படும் கார்த்திகை, மார்கழியில் பொதுவாகவே இறைச்சி விற்பனை கடும் சரிவை சந்திக்கும். பெரும்பாலானவர்கள் கோவில்களுக்கு பாதயாத்திரை, மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது போன்றவற்றால் இறைச்சியை தவிர்த்து விடுவார்கள். தற்போது அவை நிறைவுறும் நிலையில் இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டமாகவும், பொங்கல் பண்டிகையையொட்டியும் ஆங்காங்கே கால்நடை சந்தைகள் போடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை சந்தைப் பேட்டையில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை நேற்று இரவே தொடங்கியது. இங்கு திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆடு வளர்ப்போர் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சார்பில் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பல்வேறு ரகங்களிலான ஆடுகளுக்கு விலை நிர்ணயித்து விற்பனை தொடங்கியது. அதனை வாங்கி செல்வதற்காக வந்திருந்த வியாபாரிகள் பாரம்பரிய முறைப்படி கைகளை துண்டால் மறைத்து விலை பேசினர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கால்நடை சந்தைகள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தன. இதனால் ஆடு, மாடு வளர்ப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலை உருவாகி இருப்பதால் கால்நடை வளர்ப்போர் மற்றும் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை ஆனது. அதன்படி இன்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாக வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion