திருச்சியே பரபரத்து போயிடுச்சு... விவசாயிகள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு
காவிரி ஆற்றின் பாலத்தில் அதிவேகமாக வந்த இந்த ரயிலை எதிர்திசையில் வந்து மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.

திருச்சி: ரயிலை ஸ்டேஷனில் மறிச்சு பார்த்திருப்பீங்க... சிக்னல் கிட்ட மறிச்சு கேட்டு இருப்பீங்க. இப்போ உசுருக்கு துணிஞ்சு மத்திய அரசைக் கண்டித்து திருச்சி-சென்னை வைகை ரயிலை காவிரி பாலத்தில் மறிச்சாங்க பாருங்க விவசாயிகள். திருச்சியே பரபரத்து போயிடுச்சுன்னா பார்த்துக்கோங்க. இப்படி ரயிலை மறித்த விவசாயிகள் 20 பேரை போலீசார் கைது செஞ்சுட்டாங்க.
மதுரையில் இருந்து சென்னை சென்ற வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. காவிரி ஆற்றின் பாலத்தில் அதிவேகமாக வந்த இந்த ரயிலை எதிர்திசையில் வந்து மறித்து விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
விஷயம் இதுதாங்க... பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் மத்திய அரசின் சார்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங்சவுகான் பிரகலாத் ஜோஷி ஆகியோர் தலைமையில் தேசிய விவசாய சங்க தலைவர்களை அழைத்து 3-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாத நிலையில் மீண்டும் போராட்டக்களத்திற்கு விவசாயிகள் திரும்பினர். அப்போது, பஞ்சாப் காவல்துறை, மத்திய அரசின் துணை ராணுவம் ஆகியவை இணைந்து பஞ்சாபில் விவசாய சங்க தலைவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பஞ்சாப் சம்பு பார்டர் மற்றும் கநூரி பார்டர் போராட்டக்களத்தில் இருந்த கூடாரங்களையும் காலி செய்தனர். பேச்சுவார்த்தை என்று கூறி அழைத்துவிட்டு பின்னாலேயே காவல்துறையையும், துணை ராணுவத்தையும் அனுப்பி விவசாயிகளை சிறையில் அடைத்ததை கண்டித்தும், பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் அறிக்கையின்படி விலை நிர்ணயம் செய்யப்படும், கொள்முதல் செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று 12 ஆண்டுகளாக கோரிக்கை நிறைவேற்றாமல் இருந்து வருவதை கண்டித்தும், கோரிக்கை நிறைவேற்றக் கோரியும் மத்திய அரசை கண்டித்து இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி காவிரி ரயில் பாலத்தில் வைகை அதிவிரைவு ரயிலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் நிறுவனரும், தேசியத் தலைவருமான அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கொடிகளுடன் ரயிலுக்கு எதிர் திசையில் கூட்டமாக வந்து காவிரிப்பாலத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் விவசாயிகளின் இந்த அதிரடி போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை அதிவிரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடம் காவிரி பாலத்தில் ரயில் நின்றது.
ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது ஸ்டேஷனுக்கு முன்பாக சிக்னல் பகுதியிலோ விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தி இருந்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இப்படி எவ்வித அச்சமும் இன்றி காவிரி பாலத்தில் விவசாயிகள் ரயிலை மறித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் திருச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 20 விவசாயிகள் கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
திருச்சி-சென்னை ரயில் வழித்தடத்தில் காவிரி பாலத்தில் திடீரென அதிவேகமாக வந்த ரயிலை மறித்த விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு நிலவியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

