திருச்சியில் வங்கி ஊழியர்கள் டார்ச்சர் செய்ததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
’’வங்கி ஊழியர்கள் தவணை தொகையை கேட்டு தொடர்ந்து தொலைபேசி மூலமாக அவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதால் விவசாயி மருதமுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது’’
திருச்சியில் தவணை கட்ட சொல்லி டார்ச்சர் கொடுத்த வங்கி ஊழியர்கள் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தினால் தனியார் வங்கி ஊழியர்களை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் நடத்தினர். திருச்சி மாவட்டம் குழுமணி ரோடு பேரூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மருதமுத்து வயது (73) விவசாயி இவரது மனைவி ஜெயலட்சுமி 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டில் விவசாய கடனாக தனியார் மகளிர் குழு வங்கி மூலம் மருதமுத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வங்கி தவணை தொகையை கேட்டு வங்கி சார்பில் இரண்டு பேர் மருதமுத்து வீட்டிற்கு வந்தனர். இதனால் மனமுடைந்த மருதமுத்து வங்கி ஊழியர்களை வீட்டு வாசலில் உட்கார வைத்து விட்டு வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் அங்கு வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளர், காவல்துறையினர் மருதமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை என வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் வங்கி ஊழியர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (306) பிரிவில் வழக்கு பதிவு செய்தனர் காவல் துறையினர், வங்கி ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். உடனடியாக வங்கி ஊழியர்களை கைது செய்ய வேண்டுமென திருச்சி அரசு மருத்துவமனை முன்பு குடும்பத்தினர் உறவினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஜீயாபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி கொடுத்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடிந்து மருதமுத்துவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விவசாயம் செய்வதற்கு கடன் பெற்று மாதந்தோறும் உரிய தவணை செலுத்திவந்தார் மருதமுத்து. பின்பு கொரோனா காலகட்டத்தில் வருமானம் இல்லாததால் சரியான நேரத்தில் தவணையை செலுத்த முடியவில்லை, இதை நேரில் சென்று வங்கி மேலாளரிடம் மருதமுத்து தெரிவித்துள்ளார். இருந்தாலும் வங்கி ஊழியர்கள் தவணை தொகையை கேட்டு தொடர்ந்து தொலைபேசி மூலமாக அவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயி மருதமுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் தவணை தொகையை செலுத்துவதற்கு உரிய பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார் ,இந்த நிலையில் பணம் கிடைக்காத சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து தவணை தொகையை செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.வங்கி ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இது போன்ற ஒரு நிகழ்வு மற்ற விவசாயிகளுக்கு நடக்கக்கூடாது இவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.