புதுக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
’’கல்வெட்டு பலகையானது, ஊரணியின் பழைய நீர்வரத்து பாலத்தில் வைத்து கட்டப்பட்டிருந்ததால், குளத்தினை வெட்டி நீர்வரத்து பாலம் அமைத்ததற்க்கான கல்வெட்டு என கருதப்படுகிறது’’
புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே, தொடையூர் கிராமத்தில், குளத்தூர் பகுதியை ஆட்சி செய்த நமண தொண்டைமான் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்துறை பேராசிரியர் முத்தழகன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர்களான, கீரனூர் முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோரால் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. இக்கல்வெட்டு குறித்து அவர்கள் கூறியதாவது, செவ்வக வடிவ கற்பலகையில், ஏழு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டில், இடையிடையே எழுத்துக்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தின், வடக்கு பகுதியை ஆட்சி செய்த, முதலாம் நமண தொண்டைமானின், வாசல் பிரதானி ஒருவர், நீர்வரத்து பாலம் அமைத்ததற்காக இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நமண தொண்டைமானின், குளத்தூர், பேராம்பூர் மற்றும் விராலூர் கிராம கல்வெட்டுகளை போலவே, இக்கல்வெட்டிலும் "ஸ்ரீமது ரெங்க கிருஷ்ண முத்துவீர நமண தொண்டைமானார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கல்வெட்டின் தொடக்கத்தில், "பிரமாதி வருடம் "என பொறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இக்கல்வெட்டானது, கி.பி 1699 – 1700 ஆம் ஆண்டை சேர்ந்தது என கருதப்படுகிறது. முதலாம் நமண தொண்டைமான், புதுக்கோட்டை அரசின் முதல் மன்னரான ரெகுநாதராய தொண்டைமானின் சகோதரர் என புதுக்கோட்டை அரசு ஆவணம் குறிப்பிடுகிறது. இவருடைய ஆட்சி காலத்தில் குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் அக்னி ஆற்றின் தொடக்கமான குளத்தூர் பெரியகுளத்தின் கலிங்கி மடை ஆகியன கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள வாசல்பிரதானி என்பது பதவியை குறிப்பதாகும். அக்கா லத்தில், மன்னருக்கு அடுத்த அதிகாரமிக்கவராக இருந்த தளவாய் என்ற பொறுப்பிற்கு, அடுத்த முக்கியமான பதவி பிரதானி என்பதாகும். அதாவது, இப்பதவி, இக்கால நிதியமைச்சர் பதவியாகும். இந்த கல்வெட்டின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், பிரதானியின் பெயர் தெளிவாக தெரியவில்லை.
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல - மதுரை உயர்நீதிமன்றம்
இருப்பினும், கல்வெட்டு பலகையானது, ஊரணியின் பழைய நீர்வரத்து பாலத்தில் வைத்து கட்டப்பட்டிருந்ததால், குளத்தினை வெட்டி நீர்வரத்து பாலம் அமைத்ததற்க்கான கல்வெட்டு என கருதப்படுகிறது. தொண்டைமான் வாரிசுகள், இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பதால், இக்கல்வெட்டு அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்டைய கால சிறப்புமிக்க கல்வெட்டுகல் தொடர்ந்து கண்டெடுக்கபட்டு வருகிறது. மேலும் புதுக்கோடை மாவட்டத்தில் பண்டையகால மன்னர்கள் வாழ்ந்தத்ற்கு அடையாளமாய் பல சிறப்புகள் இன்றளவும் அழியாமல் உள்ளது எனவே அனைத்து கல்வெட்டுகளையும் பாதுக்காக்கும் பணியில் தமிழக தொல்லியல்துறையினர் ஈடுபடவேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவை முற்றுகை