திருச்சி - காரைக்கால் டெமு ரயில் சேவை: மீண்டும் வருமா? பயணிகளின் எதிர்பார்ப்பு! முக்கிய கோரிக்கை!
காரைக்கால்-திருச்சி DEMU ரயில் கொரோனா காலத்திற்கு முன்பு டெல்டா மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

திருச்சி: திருச்சி-காரைக்கால் இடையே மீண்டும் டெமு ரயில் சேவை இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது. பயணிகளும் இந்த டெமு ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் திருச்சியிலிருந்து காரைக்கால் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அந்த சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்கள் வழியாக காலையில் இயங்கிய காரைக்கால்-திருச்சி டெமு ரயில் பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. அதேபோல் இந்த டெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதைதான் மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழுவின் (DRUCC) 11 உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை வைத்தனர். கோவிட்-19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட காரைக்கால்-திருச்சி டெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு திருச்சியை அடையும். ஆனால், இந்த ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. காரைக்காலில் இருந்து திருச்சிக்கு காலை நேர ரயில் எதுவும் இல்லை என்று DRUCC உறுப்பினர் வி. ஆர். தனசீலன் கூறினார்.
பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். கூடுதல் ரயில்கள், புதிய நிறுத்தங்கள், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக, DRM பாலக ராம் நேகி, கோட்டத்தில் நடந்து வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
அதேபோல் திருச்சி எம்பி துரை வைகோ, DRM-க்கு தனி மனு அளித்தார். அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். திருச்சி வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். மேலும், திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
காரைக்கால்-திருச்சி DEMU ரயில் கொரோனா காலத்திற்கு முன்பு டெல்டா மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் காலை நேரத்தில் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு செல்ல வசதியாக இருந்தது. தற்போது அந்த ரயில் நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமப்படுகிறார்கள். அதனால், அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழு வலியுறுத்தியுள்ளது.





















