பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. மீண்டும் இணைந்த திருச்சி சிவா - கே.என்.நேரு..!
கழக குடும்ப வீட்டில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. என்னுடைய துரதிஷ்டம் என்னவென்றால் நான் அந்த இடத்தில் இல்லை என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பேட்டியளித்துள்ளார்.
திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள திருச்சி சிவா எம்.பி வீட்டில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர் சந்தித்து பேசியது, ”சென்னையில் இருந்து வந்த பிறகு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. அது என்ன நிகழ்ச்சி, எங்கே என்பது கூட எனக்கு தெரியாது. முழு விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தான் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ராஜா காலணி உள் விளையாட்டு அரங்கை திறப்பதற்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிலர் அண்ணன் பெயர் போடவில்லை என கூறி கருப்புக் கொடி காண்பித்தார்கள். அது எனக்கு தெரியாது, நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்தவர்களை தான் கேட்க வேண்டும் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பும் போது காவல்துறையினர் கருப்பு கொடி காண்பித்தவர்களை கைது செய்ய பெரிய வேன் ஒன்றை சாலையில் நிறுத்திவிட்டார்கள். பின்பு சில நிமிடம் கழித்து நான் மற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சென்றுவிட்டேன்.
இந்நிலையில் கழக குடும்ப வீட்டில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. என்னுடைய துரதிஷ்டம் என்னவென்றால் நான் அந்த இடத்தில் இல்லை. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறோம், என்று தகவல் எனக்கு தொலைபேசி மூலமாக தெரிய வந்தது. இந்த பிரச்சினைக்கு கம்யூனிகேஷன் இல்லாதது தான் , இது போன்ற சம்பவம் நடந்துவிட்டது. இனிமேல் நடக்காது, நடக்கவும் கூடாது என்றார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டி காத்து வருகிறீர்கள். உங்களுக்குள் எந்த விதமான பிரச்சினையும் இருக்கக் கூடாது என தெரிவித்தார். உடனடியாக திருச்சி சிவா அவர்களை நேரில் சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேரடியாக இன்று அவர் இல்லத்திற்கு வந்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், சமாதானமாக பேசிக் கொண்டோம். மேலும் நாங்கள் சமாதானமாக இருந்தால் தான் கழகத்திற்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும் என்று முதல்வர் சொன்னார். திருச்சி சிவா அவர்கள் என்னை விட வயதில் இரண்டு, மூன்று வயது சிறியவர்தான் இருந்தாலும், இது போன்ற சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என தெரிவித்தார்.
மேலும் திருச்சி சிவா ஒரு மூத்த தலைவர் திமுகவில், அவருக்கு ஒரு அவமதிப்பு ஏற்பட்டால் அது கழகத்திற்கு நல்லதல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். இருவரும் மனது விட்டு முழுமையாக பேசிவிட்டோம் இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது ,நடக்கவும் கூடாது. திருச்சி சிவா அவர்கள் அருமையாக பேசுவார் ,நான் தடுமாறி தடுமாறி பேசுவேன் என கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :
நடந்தது நடந்ததாகவே இருக்கடும், நடப்பது நல்லதாகவே நடக்கடும் என்ற தலைவரின் குரல் எங்கள் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நானும் ,அமைச்சர் நேருவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இதில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார், அதை நான் ஏற்றுக் கொண்டேன். எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி தான் முக்கியம். மேலும் அவர் ஆற்றும் தொண்டினை நான் ஆற்றுவது கேள்விக்குறி, அதேபோன்று நான் ஆற்றும் பணியினை அவர்கள் வரவேற்பது வேறு பணி. ஆகையால்
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும் என திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு இணைந்து தெரிவித்தனர்.