திருச்சியில் முன்னாள் வங்கி மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
திருச்சியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
திருச்சி காஜாமலை இ.பி. காலனி பிச்சையம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 75). இவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் ஆர்த்தி, வேலூர் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆனந்தமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பிச்சையம்மாள் நகர் பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தை கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுக்கு உரிய ஆவணம் கேட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.@abpnadu #Trichydistrict pic.twitter.com/deXv0wPZvz
— Dheepan M R (@mrdheepan) March 21, 2023
மேலும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. சோதனை முடிவில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. அந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தர்மபுரி நார்தம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்