10 ரூபாய் குளிர்பானத்தால் சிறுமி உயிரிழப்பு - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்
குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்தார் என்பது ஆய்வில் தெரிந்தால் தயாரிப்பு நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு ரித்தீஷ் என்ற 9 வயது மகனும் காவியாஸ்ரீ என்ற 6 வயது மகளும் உள்ளனர். அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரித்திஷ் நான்காம் வகுப்பும், மகள் காவியாஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவியா ஸ்ரீ நேற்று முன்தினம் கடையில் வாங்கி சாப்பிடுவதற்காக தந்தையிடம் இருந்து பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் கொடுத்து குளிர்பானம் பாட்டிலை வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறுமி திடீரென சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கிலும், வாயிலும் நுரை தள்ளி மயங்கியுள்ளார்.
குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழப்பு
இதனை அறிந்த பெற்றோர் காவியாஸ்ரீயை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் அளித்த தகவலின் பேரில் தூசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும் இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இறந்த காவியாஸ்ரீயின் தந்தை ராஜ்குமார் தெரிவித்துள்ளார். ஐந்து வயது சிறுமி குளிர்பானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி விளக்கம்
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள காவியாஸ்ரீ என்ற சிறுமி அருகில் உள்ள கடையில 10 ரூபாய் குளிர்பானம் குடித்து உயிரிழந்துள்ளார். அவருடை தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நாங்கள் விசாரித்த வரையில் அந்த கடைக்காரர் 30 பாட்டில்களை காஞ்சிபுரம் பகுதியில் இருந்து வாங்கி விற்பனை செய்துள்ளார். அதில் 29 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை, அவரிடம் இருந்த ஒரு பாட்டிலை நாங்கள் எடுத்து ஆய்விற்கு அனுப்பி உள்ளோம். அதனுடைய ரிசல்ட் வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம், வெம்பாக்கம் அதனை சுற்றியுள்ள சுகாதார நிலையங்களிலும் தொடர்புகொண்டு குளிர்பானம் குடித்து அனுமதி செய்துள்ளார்களா என்று விசாரித்து வருகிறோம். நாமக்கல், கிருஷ்ணகிரி, மாவட்ட நியமன அலுவலர்களிடம் இந்த சம்பவம் குறித்து தகவல்கள் அளித்துள்ளோம். அவர்கள் அந்த குளிர்பான நிலையத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வெளியில் கடைகளுக்கு அளிக்கப்படும் குளிர்பானங்களுடைய வரிசை எண்ணை வைத்து சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் அவர்களுடைய குளிர்பானத்தால்தான் சிறுமி உயிரிழந்தது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.