திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி ; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை...!
தயிர்/மோர் பானம் வழங்குதல், விபூதி பூசுதல் அல்லது ஆசீர்வதித்தல் போன்ற பெயர்களில் மிரட்டி அல்லது ஏமாற்றி பணம் பறிப்பது குற்றமாகும்.

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி - வழிகாட்டு நெறிமுறைகள்
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி விழா 11.05.2025 முதல் 12.05.2025 நடைபெறுவதை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 73 கார் பார்க்கிங் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எளிதாக மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கிரிவலம் செல்ல ஏதுவாக வசதி செய்ய பின்வரும் ஏற்பாடுகளை பக்தர்கள் முன்கூட்டியே அறிந்து கொண்டு முறையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“பக்தர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 9363622330-க்கு "Hello" என மெசேஜ் அனுப்பி, தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்களுக்கு செல்வதற்கான கூகுள் மேப் லிங்கை பெற்றுக்கொண்டு, அதன்மூலம் தங்கள் பாதையில் இருந்து தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்”
பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள்:
- தயிர்/மோர் பானம் வழங்குதல், விபூதி பூசுதல் அல்லது ஆசீர்வதித்தல் போன்ற பெயர்களில் மிரட்டி அல்லது ஏமாற்றி பணம் பறிப்பது குற்றமாகும். கிரிவலப் பாதையில் பாதுகாப்பு கண்காணிப்பு பணிக்கு குற்ற தடுப்பு அதிரடி படைகள் (QRT) அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் செய்வோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- கோவில் நான்கு கோபுரங்களின் முன்பும் கிரிவலப்பாதையிலும் விளக்கு வைக்க அதற்கென அனுமதிக்கப்பட்ட அகண்ட கொப்பரையில் மட்டுமே பாதுகாப்பாக ஏற்ற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாலையின் தரையில் வைக்கக்கூடாது.
- கிரிவலப்பாதையில் மாடுகளை விடுவது மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மாடுகளுக்கு அகத்திக் கீரை அல்லது பிற உணவுகளை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- அனுமதி இல்லாமல், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் அன்னதானம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்னதாகவே அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம்.
- குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க பக்தர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.
- தங்கள் செல்போன்கள், ஆபரணங்கள், பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- உதவிக்கு அருகிலுள்ள "May I Help You" காவல் மையத்தை அணுகலாம் அல்லது கீழ்கண்ட தொலைபேசி / அலைபேசி எண்களை 11.05.2025 ந் தேதி காலை 6 மணி முதல் 13.05.2025 ந் தேதி காலை 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
- திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையம்: 04175-222303
- உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்: 9498100431
- அவசர உதவி: 100
- மாவட்ட காவல் சித்ரா பௌர்ணமி கட்டுப்பாட்டு அறை: 9159616263
- கிரிவலம் பாதையில் உள்ள நீர் நிலைகளில் இறங்க வேண்டாம்.
- கிரிவலம் பாதை ஓரங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- குடிநீரை வீணாக்காமல் உபயோகிக்கவும்.
- நான்கு கோபுரங்கள் அருகிலும் கிரிவலம் பாதையிலும் காலணிகளை விட வேண்டாம். காலணிகளை அதற்கென உள்ள காலணி பாதுகாக்கும் மையங்களில் அல்லது கடைகளில் விடவும்.
- கிரிவல பாதையில் தற்காலிக கடைகள் அமைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் சத்தமுள்ள ஒலி எழுப்பிகள் பீபீ கருவிகள் (சவுண்ட் ஹார்ன்) விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது குற்றம் ஆகும்.
- கிரிவல பாதையில் உள்ள நிரந்தர கடைகளில் ஒலிப்பெட்டி மூலம் வரும்விளம்பர ஒலிகள் பக்தர்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது.
- கிரிவலம் பாதையில் தற்காலிக கடைகள் அல்லது தற்காலிக கூடாரங்கள் அமைத்து அடுப்பில் சமையல் செய்யும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.
- கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனுமதி இல்லாமல் காட்டு பகுதிக்குள் நுழைவதும், மலையேற முயற்சிப்பதும் குற்றம். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





















