பாமினி எக்ஸ்பிரஸ் ஆரணியில் நின்று செல்ல வேண்டும் - லோக்சபாவில் எம்பி தரணிவேந்தன் பேச்சு
திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கி அந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என லோக்சபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் பேசியுள்ளார்.
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு வழியாக நகரி வரை ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2006-ஆம் ஆண்டில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த பாமகவை சேர்ந்த வேலு மூலமாக தொடங்கப்பட்டது. ரயில் பாதை அமைக்க நிலம் 70 சதவீதம் கையகப்படுத்தி முடிவடைந்த நிலையில் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் ஆரணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தனர். அதன்படி ஆரணி நாடாளுமன்ற உறுப்பினராக கிருஷ்ணசாமி, ஏழுமலை, விஷ்ணு பிரசாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்ட காலகட்டங்களிலும் அந்த பணி நடக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் லோக்சபாவில் பேசியதாவது;
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக திண்டிவனத்தில் இருந்து ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி ஆமை வேகத்தில் நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. சில இடத்தில் ஆறு அல்லது ஏழு பாலங்கள் மட்டும் கட்டி உள்ளனர். ஆனால் ரயில் பாதை அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை, இதனால் ரயில் பாதை வரும். அதில் ரயில் ஓடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் நிலத்தை கொடுத்துவிட்டு இப்போது ரயில் வரவில்லை, விவசாயத் தொழிலும் செய்ய முடியவில்லை, என்ற மனவேதனையில் உள்ளனர். எனவே திண்டிவனம் - நகரி இடையே ரயில் பாதை அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கி அந்தப் பணியை விரைவில் முடிக்க வேண்டும். அதேபோல், ஆரணியில் அரிசி உற்பத்தி பட்டு நெசவுத்தொழில் புகழ்பெற்றது. ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி, மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரயில் ஆரணி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.