திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் வந்த வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய வாகனங்களுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்.
நினைத்தாலே முக்திதரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலாகும். கோவிலின் பின்புறத்தில் மலையே சிவனாக காட்சி தருகிறார். இந்த மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அண்ணாமலையார் கோவிலுக்கு வெளிநாடு ,வெளிமாநிலம் ,வெளியூர் பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வருகின்றனர். இந்த நிலையில் ஆடி பௌர்ணமி மட்டுமின்றி இப்பொழுது விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கார்களில் வருவதால் திருவண்ணாமலை நகரில் தாங்கள் நினைக்கும் இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை கூட தெருக்களில் நிறுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுத்திய வாகனங்களுக்கு அபராதம்
இந்த நிலையில் ஆடி பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களாக கிரிவலம் வந்தனர். மேலும் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக கார்களை நிறுத்திவிட்டு சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளில் நிறுத்தி வைத்திருந்த கார்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அதிரடியாக அபராதம் விதித்தனர். அந்த வகையில் ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோன்று கிரிவலம் நாட்களில் பல தெருக்களில் ஆட்டோக்கள் புகுந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன, இதை கட்டுப்படுத்த சில தெருக்களில் சாலைகளின் குறுக்கே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டது. மேலும் ஆட்டோக்கள் போக்குவரத்து விதி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ஆர் டி ஓ தலைமையில் கூட்டங்களும் நடத்தப்படுகிறது.
மின்னல் வேகத்தில் ஆட்டோக்கள்
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆட்டோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நகரின் குறுக்கு தேர்வுகளில் எல்லாம் மின்னல் வேகத்தில் புகுந்து சென்றனர். கிரிவல பாதையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்தினம் ஆய்வுக்கு சென்ற போது முதியவரை ஒருவரை ஆட்டோ இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால் முதியவருக்கு சிறிது காயம் மட்டும் ஏற்பட்டது பின்பு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பௌர்ணமி முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக வட்டார போக்குவரத்து அலுவலகம் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த என மொத்தம் 28 ஆட்டோக்களை பறிமுதல் செய்து தலா 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து அலுவலர் வட்டாரத்தில் தெரிவித்தனர்.