குமரியின் குற்றாலமான திற்பரப்பு அருவியில் சீறிப்பாயும் தண்ணீர்..! தொடரும் தடை..! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
”திற்பரப்பு அருவியில் கடந்த 6 நாட்களாக ஆக்ரோஷமாக தண்ணீர் பாய்ந்து வரும் நிலையில் 7-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது”
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளன. குறிப்பாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதோடு குளங்கள், ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் தற்போது 44.48 அடி நீர் இருப்பு உள்ளது. அணையின் அபாய அளவான 42-அடியை தாண்டி தற்போது 45 அடியை எட்டிய நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் பேச்சுப்பாறை அணையில் இருந்து 500-கன அடி மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இது திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சேர்வதால் கோதை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர் நிலைகளின் அருகாமையில் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்கும்படி ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக 7-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திற்பரப்பு தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.