சாதிய பாடல்கள் பேருந்துகளில் ஒலித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை - நெல்லை போலீஸ் எச்சரிக்கை
மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சாதிய மோதல் பிரச்சினைகளும் நடந்து வருகிறது. மாணவர்களுக்கிடையே சாதிய பிரச்சினைகள் ஏற்படாதவாறு காவல்துறை, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கிடையேயும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
பேருந்து நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உடனான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவது போன்ற சந்தேகம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாணவர்களிடையே நடைபெறும் சிறு சிறு மோதல்கள் குறித்த தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜாதிய ரீதியிலான மோதல் தடுக்கும் வகையிலும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகரப் பகுதிகளில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மீறி ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் ஒட்டுநர், நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மனோ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே மாணவர்கள் மொபைல் போனில் கேம் விளையாடி உள்ளனர். அப்போது இரு தரப்பு மாணவர்களிடயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்து அம்பாசமுத்திரம் கிளை சிறை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர். நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் அவ்வப்போது தாக்கி கொண்ட சம்பவம் அரங்கேறி வரும் சூழலில் தற்போது கல்லூரியில் மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

