தூத்துக்குடியில் சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல்
மக்காச்சோள மூட்டைகளில் வண்டு மற்றும் இதர பூச்சித்தொற்று இருப்பதும், குடோன் மிகவும் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதும் கண்டறியப்பட்டது.
![தூத்துக்குடியில் சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல் Thoothukudi news Seizure of 15 thousand tonnes of maize worth Rs 20 crore stored unsanitarily in Thoothukudi TNN தூத்துக்குடியில் சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் டன் மக்காச்சோளம் பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/20/e061feabf92b0aece6de5be13f0d136e1687229360740739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்குக் கிடைக்கப்பெற்றப் புகார் அடிப்படையில், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பு உணவு பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள சௌத் இண்டியா கார்ப்போரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான குடோன் ஒன்றினை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குடோன் ஆஸ்பின்வால் அன்ட் கம்பெனி லிமிட் என்ற நிறுவனத்தால் வாடகைக்கு எடுத்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருப்பதும், அதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 15 -ஆயிரம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதிக்காக இருப்பு வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. ஆனால், பெரும்பாலான மக்காச்சோள மூட்டைகளில் வண்டு மற்றும் இதர பூச்சித்தொற்று இருப்பதும், குடோன் மிகவும் சுகாதாரக் குறைபாட்டுடன் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 15 ஆயிரம் டன் மக்காச்சோளமும் பறிமுதல் செய்யப்பட்டு, வணிகரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. உணவு வணிகர்கள் கொள்முதல் சார்ந்த விபரங்களைத் தாக்கல் செய்யாததால், பறிமுதல் செய்யப்பட்டவற்றின் உண்மையான மதிப்பு குறித்து உறுதியான தகவல் இல்லை. இருந்தாலும் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு தோராயமாக 20 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அக்குடோனின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை உடனடியாக தற்காலிகமாக ரத்தும் செய்தும் நியமன அலுவலரால் உத்திரவிடப்பட்டுள்ளது. தொடர் விசாரணைக்காகவும், உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்ய ஏதுவாகவும், சாட்சியங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருளின் பாதுகாப்பிற்காகவும், மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு குடோன்களும் மூடி சீல் வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டவற்றிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்து, தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாதிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், இது போன்ற கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகர்வோர்கள் புகராளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)