அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தப்படும் தூத்துக்குடி கனநீர் ஆலை எப்போது செயல்படும்..?
தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து தொகுப்பு வாயு கிடைப்பது தடைப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுக்கு 49 டன் உற்பத்தி திறன் கொண்ட கனநீர் ஆலை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை.
தூத்துக்குடியில் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த இந்திய அணுசக்தி துறைக்கு சொந்தமான கனநீர் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருள் மற்றும் எரிவாயு பெறுவது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்பிக் நிறுவனத்துடன் இந்திய கனநீர் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய அணுசக்தி துறைக்கு சொந்தமான கனநீர் தொழிற்சாலை தூத்துக்குடியில் உள்ளது.
தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் அம்மோனியா நிறைந்த தொகுப்பு வாயுவை மூலப்பொருளாகக் கொண்டு இயக்கப்படும் இந்த ஆலை கடந்த 1978 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அணு உலைகளை குளிர்விக்க பயன்படும் கனநீர் இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து தொகுப்பு வாயு கிடைப்பது தடைப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுக்கு 49 டன் உற்பத்தி திறன் கொண்ட கனநீர் ஆலை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி கனநீர் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய கனநீர் வாரியம் மேற்கொண்டது. நாப்தாவை எரிபொருளாக கொண்டு செயல்பட்ட கனநீர் ஆலை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தியை தொடங்கி தொகுப்புவாயு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தொகுப்புவாயு பெறுவது தொடர்பாக ஸ்பிக் நிறுவனத்துடனும், எரிபொருளான இயற்கை எரிவாயுவை பெறுவது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இந்திய கனநீர் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி கனநீர் ஆலை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து கனநீர் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான தொகுப்பு வாயு விநியோகம் தொடர்பாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மும்பை இந்திய கனநீர் வாரிய தலைமை நிர்வாகி சத்தியகுமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன நகர எரிவாயு விநியோக திட்ட இயக்குனர் எஸ்.கே.ஜா ஆகியோர் கையெழுத்திட்டனர். மும்பை இந்திய கண நீர் வாரிய இயக்குனர் (இயக்கம்) பிரசாத், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தென்பிராந்திய பைப்லைன் திட்ட நிர்வாக இயக்குனர் சைலேஷ் திவாரி, தூத்துக்குடி கனநீர் ஆலை பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இந்திய கணினி வாரிய தலைமை நிர்வாகி சத்திய குமார் கூறும் போது, தூத்துக்குடி கனநீர் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கனநீர் ஆலை மீண்டும் செயல்பட துவங்கும் என்றார்.