அழகு மட்டும் இருந்து என்ன பயன் விளைச்சல் இல்லையே -சூரியகாந்தி விவசாயிகள் வேதனை
ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 40 ஆயிர ரூபாய் வரை செலவு செய்து சூரியகாந்தி செடிகள் காட்சி பொருளாக மட்டும் இருப்பதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெளிமாநில விதைகளால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி செடிகள் முளைப்பு திறன் இல்லாததாலும், திறட்சியான மணிப்பிடிப்பு இல்லாததாலும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமின்றி, தமிழகத்தில் சூரியகாந்தி விதை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் பகுதியில் ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா,வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். விதை விதைத்த ஒரு மாதத்தில் மழை இல்லாமல் இருந்தாலும் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அதிக ஈரப்பதம் காரணமாக வளர்ச்சியின்றி இளம் பயிர்கள் நீரில் அழுகிவிட்டன.
இதனால் கடைசிக்ட்டமாக கொத்தமல்லி, சூரியகாந்தி பயிரிட நிலங்களை விவசாயிகள் தயார்படுத்தினர். விவசாயிகள் தங்களது நிலங்களில் கடந்தாண்டு விளைந்த கொத்தமல்லி விதையை இந்தாண்டு விதைத்தனர். இதுதவிர, ஆண்டுதோறும் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கார்த்திகை மாதம் கடைசியில் சூரிய காந்தியை விதைப்பதுண்டு.
இங்கு விளைவிக்கப்படும் சூரியகாந்தியை எண்ணெய்க்காக விருதுநகர், மதுரையை சேர்ந்த வியாபாரிகள் வழக்கமாக கொள்முதல் செய்வது உண்டு. இந்தாண்டும் சூரியகாந்தி விதைக்க தனியார் விதைக் கடைகளில் விதைகள் வாங்க சென்றனர். ஆனால் கிடைக்கவில்லை, விதைக்காக விதைப்பண்ணைகளில் பயிரிடப்பட்டிருந்த சூரியகாந்தி விதைகள் போதிய முளைப்பு திறன் மற்றும் திறட்சியான மணிப்பிடிப்பு இல்லாததால், எந்தவொரு விதைக் கடையிலும் சூரிய காந்தி விதை விற்பனை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் விவசாயிள் கடும் ஏமாற்றமடைந்தனர். எந்த இடத்திலும் தமிழ்நாட்டில் விதைக் கடைகளிலும் சூரிய காந்தி விதை விற்பனை செய்யப்படாததால், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள், சூரியகாந்தி விதை உற்பத்தி செய்யக் கூடிய தெலங்கானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள தனியார் விதைக்கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.
அந்த விதைகள் முளைத்து தற்போது பூ பிடித்து வருகின்றன.15 செ.மீ., சுற்றளவிற்கு பூ பிடிக்க வேண்டிய சூரிய காந்தி பூ, மிகச் சிறிய நாணய அளவு வடிவில் பூத்து வருகிறது. மணிப் பிடிப்பும் திறட்சியாக இல்லை. மேலும் ஒரு செடிக்கு ஒரு பூ பிடிப்பது தான் வழக்கம், ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி பயிரிடப்பட்ட விதையில் ஒரு செடிக்கு 5 முதல் 25 பூக்கள் வரை பிடித்துள்ளதால், விதை வீரியம் இல்லமால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 4 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்த நிலையில் இந்தாண்டு வீட்டு பயன்பாட்டிற்கு கூட கிடைக்காத நிலை உள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு கடும் மழை பெய்து அனைத்து மகசூலும் பாதித்த நிலையில் சூரியகாந்தி கை கொடுக்கும் என நம்பினர். அதுவும் ஏமாற்றமாகி விட்டது.
எனவே, கடந்த 2 ஆண்டுகளாக இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற, 2020-21 பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதுமட்டுமல்லாது சூரியகாந்தி விதைகள் தமிழகத்தில் கிடைக்கும் வகையில் விதைப் பண்ணைகள் மூலம் விதை நேர்த்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 25ஆயிரம் முதல் 40 ஆயிர ரூபாய்வரை செலவு செய்து சூரியகாந்தி செடிகள் காட்சி பொருளாக மட்டும் இருப்பதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் தரமான விதைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்