நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் துரைமுருகன்
கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சத கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். முதலவதாக தாமிரபரணி ஆறு, நம்பி ஆறு, கருமேனி ஆறு இணைப்புத்திட்ட பணிகளில் மூன்றாவது நிலையாக நடந்து வரும் நாங்குநேரி அருகே உள்ள கோவன்குளம் பகுதியை அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் திட்டப்பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கடைசி பகுதியான தூத்துக்குடி மாவட்டம், எம்.எல்.தேரி பகுயிலும் ஆய்வு செய்தனர். பின்னர் நெல்லை பொன்னாக்குடியில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே நிதிநீர் இணைப்பு திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் இடையன்குடியில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அங்குள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் கடந்த 2009 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின் 2011- ம் ஆண்டு வரை புயல் வேகத்தில் நடந்து வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தீண்டினால் தீட்டு என கிடப்பில் போட்டு விட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு செய்ததன் அடிப்படையில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதம் மழை காலங்களில் இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் முறையாக பணம் வழங்கவில்லை,
தற்போது இடம் கொடுத்தவர்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது., நிதி ஆதாரத்தைப் பொறுத்து அணைகள் தூர்வாரப்படும், கடனா நதி, ராமநதி இணைப்பு திட்டம், ஜம்பு நதி மேல் மட்ட கால்வாய்த்திட்டம் குறித்து அடுத்த மாதம் தென்காசி மாவட்டம் செல்கிறேன். அங்கு ஆய்வு செய்து திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். நிதி ஆதாரங்களை பொறுத்து அணைகள் தூர்வாரும் பணி நடத்தப்படும். பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி உள்ளது. முறையாக அனுமதிகளை பெற்றுத்தான் கொண்டு செல்கிறார்கள். கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர்த்து ராட்சத கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்