குற்றாலத்தில் தனியார் அருவிக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்! ஏமாற்றத்துடன் திரும்பிய பயணிகள்!
தென்காசி அருகே தனியார் நீர்வீழ்ச்சிக்கு அரசு அதிகாரிகள் பூட்டு போட்டியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணை மேற்பகுதியில் அமைந்துள்ளது கண்ணுபுளிமெட்டு. இந்த இடத்தை சுற்றி 10க்கும் மேற்பட்ட தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் நீர்வீழ்ச்சிகள்:
குற்றாலத்தில் தற்போது நிலவி வரும் சீசனை அனுபவிப்பதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டம் தாண்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெத்து வருகின்றனர். இந்த சூழலில் குற்றாலத்திற்கு வரும் மக்கள் அங்கு குளிப்பதற்கு தடை என்ற காரணத்தால் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் பலரும் குற்றாலம் அருகே உள்ள செங்கோட்டை அடுத்துள்ள குண்டாறு அணையின் மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
பூட்டு வைத்த அதிகாரிகள்:
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனியார் நிகழ்ச்சிகளுக்கு படை எடுத்த நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றி தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லாதவாறு பூட்டு போட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்ட நிலையில் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் வழியை கோட்டாட்சியர் அதிரடியாக பூட்டு போட்டு தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் என்ன?
தென்காசி அருகே குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை அருவிகளும், ரிசாட்டுகளும் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அருவிகள் வணிக நோக்கத்துடன் வசதியான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலையில் இருந்து வரும் நீரை மறித்து அதனை திசைதிருப்பி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளனர். அதற்கு கட்டணமும் வசூல் செய்கின்றனர். காடுகளில் அனுமதியின்றி ரிசார்ட்டுகளும் கட்டப்பட்டுள்ளது. இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களுக்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால் செயற்கை நீர்வீழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மேக்கரை பகுதிகளில் இருந்த 22 தனியார் அருவிகள் போலிஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.