தென்காசி அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
தென்காசி அருகே முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் மூர்த்தி. இவர் செங்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூர்த்தி பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது, அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூர்த்திக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை:
இந்த நிலையில் நேற்று இரவு மூர்த்தி வீட்டில் இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த குற்றாலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருமணம் பேசி முடிக்கப்பட்ட பெண் மாப்பிள்ளையை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் காவலர் மூர்த்தி இறந்ததற்கு பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உறவினர்கள் போராட்டம்:
இதனால் இறந்த காவலர் மூர்த்தியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனைக்கு திரண்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இறந்த காவலரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. தென்காசி அருகே முதல் நிலை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060...