மீனவர்களின் பாக்கெட்டை நிரப்பும் சீலா மீன் சீசன் தொடக்கம்.. நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்..
20 கிலோ எடைக்குமேல் பெரிய சீலா மீன் வலையில் சிக்குவது மிகவும் அரிது. தற்போது 1 கிலோ சீலா மீனின் விலை ரூ.800 ஆக உள்ளது. பெரிய அளவிலான சீலா மீன் அதிக ருசியுடன் இருக்கும் என்கின்றனர்.
மீனவர்களின் பாக்கெட்டை நிரப்பும் சீலா மீன் சீசன் தொடக்கம்;
கீழக்கரை சாயல்குடி பகுதியில் சீலா மீன் சீசன் தொடங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன் வகைகளிலேயே அதிக சுவை உடைய மீன் நெய் மீன் என்று அழைக்கப்படும் சீலா மீன். அதிக சுவை கொண்டதால் என்னவோ அதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். சீலா மீனை மீன்களின் ராஜா என்றும் சொல்வார்கள்.இந்தியப் பெருங்கடலில் சீலா மிகுந்து காணப்படும். கடலில் உள் பரப்பினை விட கடலின் கரையோர பகுதிகளிலேயே இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படும். ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கீழக்கரையில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. மீனவர்கள் பிடிப்பதில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் இருந்தாலும் சில மீன் வகைகள் மட்டும் ருசியாக இருக்கும். அப்படியான மீன் வகைகளில் அதிக சுவை கொண்டது என்றால் அது வஞ்சிரம், நெய்மீன் என்று கூறப்படும் சீலா மீன்தான். சீலா மீனில் முள்ளே இல்லாமல் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.ஆண்டுதோறும் சீலா மீன் சீசன் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். சில சமயம் கூடுதல் காலம் நீடிக்கும். சீலா மீன் சீசன் தற்போது உச்சத்தில் உள்ளது. கீழக்கரை பகுதி கடல்பகுதியில் சீலா மீன் சீசன் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சீலா மீன்கள் பிடித்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.
வேறு மாவட்டங்களில் இருந்து கீழக்கரை பகுதிக்கு வருகை தந்து சீலா மீன்களை பிடித்து வருகின்றனர். குறிப்பாக கீழக்கரை முதல் வாலிநோக்கம் கடல் பகுதிகளில் கிடைக்கும் சீலா மீன் அதிக ருசி கொண்டவை.கரை வலை மீனும் ருசி மிகுந்ததாக இருக்கும். நாட்டு படகுகளில் சென்று ஆழ்கடலில் வலையை வீசிவிட்டு வந்து பின்னர் கரையில் இருந்து 50 முதல் 100 பேர் சேர்ந்து வலையை இழுத்து சீலா மீன்களை பிடிக்கின்றனர். இதனை கரை வலை மீன்கள் என்றழைக்கின்றனர்.
நீண்ட (தங்கு கடல்) மீன்பிடியில் ஈடுபட்டு மீனவர்கள் நேற்று பலவகை மீன்களுடன் கீழக்கரை கடற்கரைக்கு திரும்பினர். இதில் பல படகுகளில் சீலா மீன்கள் சுமார் 170 கிலோ வரை கிடைத்தன. ஒரு படகில் சுமார் 4 அடி நீளத்தில் 25 கிலோ எடை கொண்ட ஒருபெரிய சீலா மீனும் சிக்கியது.மீனவர்கள் பிடித்து வந்த சீலா உள்ளிட்ட அனைத்து மீன்களையும் வியாபாரிகள், கம்பெனிகள் விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். கீழக்கரை மீன் மார்க்கெட்டில் ரூ.1000 வரை விற்ற சீலா மீன் ரூ.800க்கு விலை கிடைப்பது மீன் பிரியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்து மீன் பிரியர்கள் கூறுகையில், கீழக்கரை பகுதி கடலில் சீலா மீன் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. மீன் பிடித்து கரை திரும்பிய படகுகளில் சராசரியாக ஒரு சீலா மீன் ஒரு கிலோவில் இருந்து 23 கிலோ எடை வரை கிடைத்துள்ளது. 20 கிலோ எடைக்குமேல் பெரிய சீலா மீன் வலையில் சிக்குவது மிகவும் அரிது. தற்போது 1 கிலோ சீலா மீனின் விலை ரூ.800 ஆக உள்ளது. பெரிய அளவிலான சீலா மீன் அதிக ருசியுடன் இருக்கும் என்கின்றனர்.