நெல்லையில் தொடர் கனமழை - தாமிரபரணி ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்
’’பொதுமக்கள் தாமிரபரணி நதியில் சென்று குளிக்க வேண்டாம் என்றும், கரையோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என வேண்டுகோள்’’
நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் காலை முதல் கனமழை - தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது, இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, குறிப்பாக தாமிரபரணி ஆற்றிலும் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
பின்னர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டத்தில் மழை ஓய்ந்து காணப்பட்டது. ஒரு சில இடங்களிலும் வெயிலும், ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது, இந்த நிலையில் நான்கு தினங்களுக்கு பிறகு நேற்று நெல்லை மாநகரில் பல இடங்களில் திடீரென மிதமான மழை பெய்தது, இந்த நிலையில் இன்று காலை முதல் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது, கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வள்ளியூர் கல்வி வட்டத்திற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சம் ராதாபுரம் பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.29 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது, தற்போதைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 3 அடி உயர்ந்து 138.40 அடியாக உள்ளது, அணைக்கு விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, அணையில் இருந்து 1352 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது, 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணை 5 அடி உயர்ந்து 145 அடியாக உள்ளது, உபரி நீர் வெளியேற்றம் மற்றும் மழை நீரால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் சென்று குளிக்க வேண்டாம் என்றும், கரையோர பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் நீர் நிலைகளின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க வேண்டாம், தமிழக அரசு மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை குறித்து வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.