கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி தரவேண்டும் - முதல்வருக்கு விக்கிரமராஜா கோரிக்கை
ரவுடிகள், வணிகர்களிடம் தகராறு செய்தால் இரட்டை வழக்குகள் பதிவு செய்து இறுக்கமான பாதுகாப்பை தர வேண்டும் என கோரிக்கை
தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற 39 ஆவது வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல லட்சம் வணிகர்கள் வருவதற்கான சூழலை உருவாக்கி உள்ளோம். தூத்துக்குடி மண்டலம் சார்பில் 25 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக அமையும். தமிழக முதலமைச்சர் எங்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். கொரோனா தொற்று பேரிடர் காலத்துக்கு பிறகு வணிகர்கள் மத்தியில் பல ஏக்கங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், அறநிலையத்துறை கடை வாடகைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. ஆகையால் அறநிலையத்துறை கடை வாடகைகளை முறைப்படுத்த வேண்டும். வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. கலைஞரால் கொண்டு வரப்பட்ட திட்டம் வணிகர் நலவாரிய திட்டம்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் கட்டண சலுகையோடு, ஜி.எஸ்.டி பதிவு இல்லாதவர்களையும் வாரியத்தில் சேர்க்கும் வாய்ப்பை தந்து இருக்கிறார்கள். இது ஒரு வரப்பிரசாதம். இந்த நலவாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து, முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆகையால் இந்த மாநாடு கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து வணிர்களுக்கு விடியல் மாநாடாக அமையும். கொரோனா தொற்று குறைந்து உள்ளது. ஆகையால் ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டு, முககவசம் தளர்த்திவிட்டு, 24 மணி நேரமும் வியாபாரிகள் கடை திறந்து வியாபாரம் செய்யலாம். உங்களுக்கு பாதுகாப்பாக இந்த அரசு உள்ளது, போலீஸ் துறை உள்ளது என்ற நம்பிக்கையை முதலமைச்சர் உருவாக்க வேண்டும்.
ஆலைகள் மூடுவதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்வது இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சாய பட்டறைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதால், பல சாயப்பட்டறைகள் குஜராத் மாநிலத்துக்கு இடம் மாறி செல்கின்றன. வருகிற 24ஆம் தேதி முதல்-அமைச்சர் உலக புகழ் பெற்ற தொழில் கண்காட்சியை காண துபாய் செல்கிறார். ஆனால் உள்நாட்டு வணிகர்கள், உள்நாட்டு நிறுவனத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறை அதிகாரிகள் ஒரு நச்சுத்தன்மை வெளியேறுகிறது என்றால், அதனை அதிகாரிகள் கையாண்டு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமே தவிர, நிறுவனங்களை மூடுவது என்பது சாத்தியக்கூறாக இருக்காது. எல்லா வகையிலும் தொழில்கள் பாதிப்புகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அதற்கான முயற்சியை முதலமைச்சர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில் பூங்காக்கள் அதிகம் உள்ளன. அங்கு ரவுடியிசம் அதிகமாக உள்ளன. இதனால் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ரவுடியிசத்தை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ரவுடியிசம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. வணிகர்களிடம் தகராறு செய்தால் இரட்டை வழக்குகள் பதிவு செய்து இறுக்கமான பாதுகாப்பை தர வேண்டும் என்றார்.