Nellai: கைக்குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண் - இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சோகம்
வளர்மதிக்கு மன நல பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கு கும்பிகுளத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி (வயது 29). இத்தம்பதியினருக்கு ஐந்து வயது பெண் குழந்தை மற்றும் ஆறு மாத கைக்குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இச்சூழலில் வளர்மதிக்கு மனநல பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் அவர் குணமடைந்த நிலையில் ஊருக்கு வந்ததாக தெரிகிறது. அதன்பின்னர் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் வளர்மதி காணாமல் போயுள்ளார். 20 ஆம் தேதி முதல் அவரை காணாத நிலையில் அவரது கணவர் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். மனைவியும் குழந்தையும் கிடைக்காத நிலையில் கணவர் கண்ணன் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் கும்பிகுளத்திற்கும், சமூகரெங்கபுரத்திற்கும் இடையே மூடப்பட்டு இருந்த கல்குவாரி குட்டையில் இருவர் உடல் மிதப்பதாக அங்குள்ளவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தண்ணீரில் மிதந்த இருவரது உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது காணாமல் போன வளர்மதி மற்றும் 6 மாதக்குழந்தை என தெரிய வந்தது. பின்னர் மீட்கப்பட்ட இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவரும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனரா அல்லது வளர்மதி குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு மாத கைக்குழந்தையும் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்