Nellai Mayor Election: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? - ஆகஸ்ட் 5 இல் தேர்தலா?
05.08.24 அன்று நெல்லை மேயருக்கான தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில் செவிவழி செய்தியாகவே உலாவி வருகிறது.
நெல்லை மேயர் ராஜினாமா எதற்காக?
நெல்லை மாநகரத்தின் மேயராக சரவணனும், துணை மேயராக ராஜுவும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் மேயருக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே நடந்த பனிப்போர் காரணமாக தற்போது நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தாலும் கட்சிக்குள் நிலவிய பனிப்போர் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்களே மேயர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்ததோடு ஒவ்வொரு கூட்டங்களையும் புறக்கணித்தும் வந்தனர். இதனால் மக்கள் பணிகள் எதுவுமே நடைபெறாத நிலையில் நெல்லை மாநகராட்சி இருப்பதாக சொந்த கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் திமுக தலைமை அறிவுறுத்தியதன் பேரில் அவர் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கடிதம் கடந்த 08.07.24 அன்று கூடிய மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒரு மனதாக மன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து துணை மேயர் ராஜூ மேயராக பொறுப்பில் இருந்து வருகிறார்.
புதிய மேயர் யார்?
புதிய மேயர் யார் என பலரின் மனதிலும் கேள்வி எழுந்து வந்தது. குறிப்பாக 25 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கும் ராமகிருஷ்ணன் என்ற கிட்டுவிற்கு வாய்ப்பு இருப்பதாவும், அதே போல 27வது வார்டு மாமன் உறுப்பினராக உள்ள எஸ். உலகநாதன் என்பவருக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரையும் தவிர இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ள துணை மேயர் ராஜு தற்போது பொறுப்பு மேயராக இருந்து வரும் நிலையில் இதே நிலை தொடரவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மாவட்ட செயலாளராக இருந்த அப்துல்வஹாப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த சரவணன், மேயராக பொறுப்பேற்ற பின் தன்னிச்சையாக செயல்பட்டதன் காரணமாக வஹாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மேயரின் ஒவ்வொரு செயலுக்கும் போர்க்கொடி தூக்கி வந்ததும் அதன் பின்னரே மேயர் ராஜினாமா செய்யப்பட்டதும் அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாக எழுந்தது.
மேயர் தேர்தல் எப்போது?
இந்த நிலையில் தான் காலியாக உள்ள மேயர் பதவியிடங்களை நிரப்புமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 05.08.24 அன்று நெல்லை மேயருக்கான தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளிவராத நிலையில் செவிவழி செய்தியாகவே உலாவி வருகிறது. அதன்படி 5 ஆம் தேதி நெல்லை மேயருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் ஒரு வேளை திமுக தலைமை ஒரு வேட்பாளரை அறிவிக்கும் அல்லது மாமன்ற உறுப்பினர்களே மேயரை தேர்ந்தெடுப்பார்கள். குறிப்பாக நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 55 வார்டுகளில் 44 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் 7 பேரில் அதிமுக சார்பில் 4 பேர் மட்டுமே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.