Nainar Nagendran: ஒரு வேளை விஜயை பார்த்து ஆளுங்கட்சி பயப்படலாம்..! 21 கேள்வி தேவையில்லை - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
"மீண்டும் அதிமுகவுடன் இணக்கம் வந்தால் சந்தோசம்" தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஏனென்றால் முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருக்கிறார் - நயினார் நாகேந்திரன்
வஉசி பிறந்த நாள் - நயினார் நாகேந்திரன் பெருமை:
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் பாஜகவின் சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வ உ சிதம்பரனார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வ உசி மணிமண்டபம் அமைய முதல் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நான் அமைச்சராக இருந்த நேரத்தில் மக்களது முதல் கோரிக்கை வ உ சி மணிமண்டபம் இந்த இடத்தில் கட்ட வேண்டும் என்பது தான். அவர்கள் விருப்பப்படி ஜெயலலிதா அவர்கள் 75 லட்சம் செலவில் செக்கும், வ உ சிக்கு முழு உருவ சிலையும் அமைத்து கொடுத்தார். அதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை பெருமையோடு சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.
தமிழகத்தை பார்க்காமல் சைக்கிள் ஓட்டும் முதல்வர்:
மேற்கு வங்கத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதற்காக ஆளுங்கட்சி போர்க்கொடி தூக்கினர். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். சட்டம ஒழுங்கு சரியாக இல்லை. எல்லா பள்ளி வாசலிலும் கஞ்சா விற்கின்றனர், இதனை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் சைக்கிள் ஓட்டுவதை குறையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
விஜயை பார்த்து ஆளுங்கட்சி பயப்படுகிறதா?
விஜய் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது குறித்த கேள்விக்கு, எந்த கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கென்று ஒரு சுதந்திரம் உள்ளது. கட்சி மாநாடு நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். ஒரு வேளை ஆளுங்கட்சி விஜயை பார்த்து பயப்படலாம். கேட்டால் அனுமதி கொடுக்கலாம். 21 கேள்வி தேவையேயில்லை என்றார். மேலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணி தனக்கு பதவி வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டமன்ற உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார். அவர்களுக்கு நிச்சயம் பதவி கொடுக்க வேண்டும். ஆனால் அதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கலாம். வருங்காலத்தில் அவர்களுக்குரிய பதவியை சுணக்கம் இன்றி காலதாமதம் இன்றி கட்சி மேலிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் அதிமுகவுடன் இணக்கம் வந்தால் சந்தோசம் தான் என்றார். இறுதியாக தொடர்ந்து முதலீட்டிற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்தும், ஒரு ட்ரில்லியன் டாலரை நோக்கி தமிழ்நாடு செல்லுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்று நக்கலாக பதிலளித்துச் சென்றார்.