குற்றாலம் அருவியில் திடீரென உருண்டு வந்த கல்..! 5 பேர் படுகாயம்..!
தண்ணீரின் அளவு குறைவாக அருவியில் கொட்டிய போதும் மலைப்பகுதியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல்லால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்குள்ள இயற்கையான நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ மாவட்டங்களை தாண்டி வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிவர். குறிப்பாக விடுமுறை தினங்களன்று அருவிகளில் கூட்டம் அலைமோதும். இங்கு மெயின் அருவி, சிற்றறுவி, ஐந்தருவி, குண்டாறு நீர்வீழ்ச்சி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகா தேவி அருவி என அருவிகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருவியில் இருந்து கீழே உருண்டு வந்த கல் விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தற்போது படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளிப்பதற்கு தனி பிரிவும், பெண்கள் குளிப்பதற்கு தனி இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது, இந்த சூழலில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென அருவியில் இருந்து உருண்டு வந்த பெரிய அளவிலான கல் ஒன்று சுற்றுலா பயணிகள் மீது விழுந்துள்ளது. இதில் கடையநல்லூரை சேர்ந்த உதுமான் மைதீன், புனலூரை சேர்ந்த ஜமால், புனலூரை சேர்ந்த பிஜு தென்காசியை சேர்ந்த அருண்குமார், அறந்தாங்கியை சேர்ந்த கணேசன் என 5 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அங்கிருந்த காவலர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறிப்பாக, தற்போது தண்ணீரின் அளவு குறைவாக அருவியில் கொட்டிய போதும் மலைப்பகுதியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல்லால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்காசி தீயணைப்பு துறையினர் சற்று நேரத்தில் குற்றாலம் அருவி விழும் பகுதியின் மேற்பகுதியில் இருக்கும் சில செடி வேர் பகுதியில் உள்ள மீத உள்ள சிறிய கற்களை அகற்றிய பிறகு குளிக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

