நெல்லையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு...பலூன் பறக்கவிட்ட காங்கிரஸார் கைது
மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலன்களையும் பறக்க விட்டு பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை முன்பு கையில் கருப்பு கொடியுடன் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். முன்னதாக தூத்துக்குடியில் நடைபெறும் அரசியல் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை பொதுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். இதை ஒட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை மாவட்டம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் அக்கட்சியினர் கையில் கருப்பு கோடி ஏந்தியபடி பாளையங்கோட்டையில் உள்ள தனுஷ்கோடி ஆதித்தன் இல்லத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலன்களையும் பறக்க விட்டனர். தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை முன்பு கையில் கருப்பு கொடியுடன் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
பின் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை நோக்கி செல்ல முயன்ற போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உட்பட சுமார் 20 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இலங்கை மீனவர் பிரச்சனை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்தியதாக தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் வரும் நேரத்தில் மாநகரின் முக்கிய பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.
அதே போல பிரதமரை வரவேற்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியினர் பாளையங்கோட்டை நகரப்பகுதி சாலை ஓரங்களில் வரவேற்பு விளம்பர பதாகைகளை வைத்தனர். இந்த விளம்பர பதாகைகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது எனக்கூறியும், உயர்நீதிமன்ற WP ( MD ) நம்பர் 25974/2023 என்ற உத்தரவை மீறும் வகையிலும் விளம்பர பதாகைகள் மற்றும் கொடிகள் கட்டப்பட்டுள்ளதை அகற்ற கோரி நெல்லை மாநகர திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 10 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும் போது, திமுக சார்பில் இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் விளம்பர பதாகைகள் வைக்கும் போது, பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை வாங்கி உள்ளார்.
அதே உத்தரவை இப்போது பாரதிய ஜனதா கட்சியினர் மதிக்காமல் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். ஆளுங்கட்சியான திமுக சார்பில் பேனர்கள் வைத்த போது பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போது விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இப்போது உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனர். உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் எனக்கோரி பாளையங்கோட்டை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். காவல்துறையினர் அகற்றாவிட்டால் திமுக சார்பில் நாங்கள் அகற்றுவோம் என வழக்கறிஞர் அணியினர் தெரிவித்தனர்