இஸ்லாத்துக்கு மாறிய கிறிஸ்துவர்கள்- ஊர் பெயர் கொம்புத்துறையா ?கடையக்குடியா?- மத மோதலுக்கு முன் விழிக்குமா அரசு?
இரு சமூக மக்களின் இந்த பிரச்னை வேறு வழியில் திசை திரும்ப அநேக வாய்ப்பு உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நல்ல ஒரு தீர்வு கண்டு இந்த பிரச்னையை முடிக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே உள்ளது காயல்பட்டினம் என்ற நகராட்சி. இந்த ஊரில் பெரும்பான்மையாக முஸ்லீம் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை அடுத்து 'கொம்புத்துறை' என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்த 1500 பேர் உள்ளனர்.
முஸ்லீம் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ளடக்கிய கொம்புத்துறை கிராமத்தை முஸ்லீம் சமூக மக்களால் 'கடையக்குடி' என்று அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் பிரச்னையே ஊரின் பெயர் கடையக்குடியா? கொம்புத்துறையா? என வழக்கு போடப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த அந்தோணி பிராங்கோ என்ற முகமது பிராங்கோ (29), ஜெபாஸ்டியன் என்ற ஈசா (32), வில்பிரட் என்கிற சலீம் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். இதில், சலீம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். அப்போது ஒரு சில நெருக்கடி காரணமாக அந்த மீனவ கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தால் தற்போது காயல்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் முஸ்லீம் மதம் மாறிய இருவருக்கும் அதே எதிர்ப்பு குரல் பலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கொம்புத்துறை மீனவ சங்கத்தினர் கொம்புத்துறை கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். கொம்புத்துறை மீனவர்களோ இதை மறுக்கின்றனர். ஊர் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்து உள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காயல்பட்டிணத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, “கடந்த 47 வருடங்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் இருந்து கடல் தொழிலுக்காக அந்த மக்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு இடம் கொடுத்து அப்போது ஆதரவு அளித்தோம். பின்னர், அப்பகுதி மக்கள் தாங்கள் வழிபட ஆலயம் அமைத்தனர். பின்னர், 'கடையக்குடி' என்ற ஊர் பெயரை 'கொம்புதுறை' என்று மாற்றினர். அப்போதும் அதனையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது அவர்கள் மதத்தில் இருந்து இருவர் எங்கள் மதத்திற்கு வந்துள்ளனர். அதனை பொறுக்க இயலாதவர்கள் வேண்டும் மென்றே ஊர் பெயர் பலகையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த இருவரும், மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.
மதம் மாறியதால் தொழில் செய்ய விடாமல் முட்டுகட்டை போடுகின்றனர் என கூறும் அவர்கள், மீன் தொழில் செய்து வரும் இவர்களது படகை தள்ளி விடுவதற்கு டிராக்டர் பயன்படுத்தபட்டு வருகிறது. இந்த டிராக்டர் கொம்புத்துறை மீனவர் நலச் சங்கத்திற்கு சொந்தமானது என்பதால் டிராக்டர்களை கடலில் தள்ளுவதற்காக வழங்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால் இந்த டிராக்டர்களை ஐக்கிய ஜமாத் முஸ்லீம் சமூகத்தில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதியதாக வாங்கி கொடுத்தோம். ஆனால், உள்ளூர் மீனவர்கள் அதையும் பயன்படுத்த விடாமல் தடுத்து பிரச்னை செய்து வருகின்றனர். மேலும் மதம் மாறிய மீனவர்களை கடல் தொழிலுக்கு அனுமதித்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்கின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து கொம்புத்துறை மீனவர்கள் கூறும்போது, ”எங்களது ரேசன்கார்டு, ஆதார் கார்டு, மீனவர் அடையாள அட்டை என எல்லாத்திலும் கொம்புத்துறை என்ற பெயரில் தான் இருக்கு, ஆனால் தீர்வையை கடையக்குடி என அதிகாரிகள் தருகின்றனர், பிறப்பு சான்றிதழை ஒரு சில அதிகாரி கொம்புத்துறை என தருகின்றனர். ஆனால் சிலர் பிராக்கட்டில் கொம்புத்துறை, கடையக்குடி எனவும் தருகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக்கூறும் மீனவர்கள், தற்போது ஊர் பெயர் தான் பிரச்னையாக உள்ளது. யாரும் மதம் மாறி போனவர்களை பற்றி கவலைப்படவுமில்லை, மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதை தடுக்கவுமில்லை.
கிராமத்திற்கு கடையக்குடி என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஊரின் பெயர் கொம்புத்துறை என்றே தான் காலம், காலமாக உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தினர் கடையக்குடி என்று அழைத்து வருகின்றனர். மதம் மாறிய இவர்கள் படகை தள்ளி விடுவதற்கு முஸ்லீம் சமூகத்தில் இருந்து வழங்கப்பட்ட டிராக்டர்களில் ஊர் பெயரை கடையக்குடி என்று எழுதி வைத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சினையை முடிக்க வேண்டும்” என்கின்றனர்.