'நீ செத்துப்போயிட்ட உனக்கு அரிசி இல்ல' - கடலாடி அருகே ரேசன் கடைக்கு சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
ரேஷன் கார்டில் இருந்து நான் இறந்து விட்டதாக பெயரை நீக்கிய அதிகாரிகளால் தன்னுடையது ஆதார் கார்டும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளாக உயிரோடு இருந்து வேதனை தெரிவிக்கும் மூதாட்டி
ரேஷன் கார்டில் இருந்து நான் இறந்து விட்டதாக பெயரை நீக்கிய அதிகாரிகளால் தன்னுடையது ஆதார் கார்டும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளாக உயிரோடு இருந்தும் இறந்து விட்டதாக வாழ்ந்து வருவதாக மூதாட்டி வேதனை தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி மனு அளித்தார். அதில்,ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் மகாலிங்கம் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். எங்கள் இரு மகன்களும் திருமணம் முடிந்து வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். எனது கணவர் மகாலிங்கம் இறந்த நிலையில் அவருடைய பென்ஷன் தொகையை வைத்து வாழ்ந்து வருகிறேன்.
இந்நிலையில் தனது மகன் ரேஷன் கார்டில் உள்ள தன்னுடைய பெயரை நீக்கிவிட்டு, தன்னுடைய பெயரில் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என கடலாடி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு கொடுத்தேன். ஆனால் நான் இறந்து விட்டதாக கூறி எனது பெயரை நீக்கியுள்ளனர். மேலும் என்னுடைய ஆதார் கார்டும் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்த கடலாடி வட்ட வழங்கல் அதிகாரி களும் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஓராண்டாக புதிய ரேஷன் கார்டு வந்துவிடும் என என்னை அலைக்கலித்து வந்தனர்.
கார்டு பின்னர் தன்னுடைய மகனிடம் இது குறித்து தெரிவித்தேன். அவர் ராமநாதபுரம் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நான் இறந்துவிட்டதாக எண்ணி தவறுதலாக பெயரை நீக்கி விட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இதனால் ஆதார் கார்டில் இருந்தும் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. ஆதார் கார்டில் மீண்டும் திருத்தம் செய்து புதிய ரேஷன் கார்டு வழங்குவதாக அவருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே ஓராண்டுகள் அலைந்து இந்த தகவல் கிடைத்த நிலையில் தற்போது அந்த உத்தரவாதமளிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை ஆதார் கார்டில் திருத்த செய்யாததால் நான்கு ஆண்டுகளாக உயிரோடு இருந்தும் இறந்ததாக வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது கணவரின் பென்ஷன் தொகை நான் இறந்து விட்டதாக நினைத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய பெயரை ஆதார் கார்டில் சேர்த்து புதிய ரேஷன் கார்டு, அல்லது எனது மகன் ரேஷன் கார்டிலேயே தனது பெயரை மீண்டும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாரியம்மாள்,'உசுரோட இருக்குற என்ன, செத்துட்டேன்னு சொல்லி ரேஷன் கார்டுலருந்து எனது பெயரை நீக்கிட்டாக, இதனால் எனது ஆதார் கார்டு முடக்கப்பட்டுள்ளது. இறந்த எனது கணவரின் பென்ஷனை வைத்துதான் நான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். "ஆனால் நான் இறந்து விட்டதாக அந்த பென்ஷனும் நின்னு போச்சு" அதிகாரிகள் அலட்சியத்தால் நான்கு ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கும் மனு கொடுத்து நடையாய் நடக்கிறேன். எனக்கு புதிய ரேஷன் கார்டு வழங்காவிட்டாலும் பரவாயில்லை, என்னுடைய மகன் ரேஷன் கார்டிலாவது எனது பெயரை சேர்த்து வழங்குங்கள் என அதிகாரிகளிடம் மன்றாடி வருகிறேன். தவறு செய்தது அவர்கள் ஆனால் நான் தவறு செய்துபோல் அலைக்கழிப்பது மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார்.