திருச்செந்தூர் கடற்கரையில் மணல் குளியல் எடுத்த பக்தர்கள்- அறிவியல் பூர்வமாக உடலுக்கு ஆரோக்கியம்
ஆன்மீக சுற்றுலா வந்து திருச்செந்தூர் கடலில் சூரிய குளியல், மணல் குளியல் இடுவது செலவும் குறைவு உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
தொடர் விடுமுறையையொட்டி உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக மணல் குளியல் குளித்து வருகின்றனர். மணல் குளியல் குளிப்பதால் அறிவியல்பூர்வமாகவும், மருத்துவபூர்வமாகவும் உடல் ஆரோக்கியம் பெறுவதாக ஆயுர்வேத மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். மேலும் உடலில் கடற்கரை மணலை எடுத்து பூசி கடற்கரை மணலில் உடல்களை புகுத்தி சில மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் இருந்து பின்னர் கடலில் ஆனந்தமாக குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.
இதுபற்றி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரமணா கூறுகையில், கடலில் குளிப்பதால் உடலில் நச்சுத்தன்மை நீங்கி பல்வேறு நோய்கள் குணமாவதாக தெரிவித்தார். மேலும் கோவா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகமான செலவுகள் செய்து மிகப் பெரிய கடற்கரையில் பொதுமக்கள் சூரிய குளியல் மற்றும் மணல் குளியல் செய்து வருகின்றனர். ஆனால் இது மாதிரி ஆன்மீக சுற்றுலா வந்து திருச்செந்தூர் கடலில் சூரிய குளியல், மணல் குளியல் இடுவது செலவும் குறைவு உடலுக்கும் ஆரோக்கியத்தை தருவதாகவும் அறிவியல் பூர்வமாகவும், மருத்துவபூர்வமாகவும் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
உப்புக்காரத்தன்மை உடைய கடலில் நீண்ட நேரம் குளிப்பதனால் உடலில் பல்வேறு தோல் நோய்கள் தீறும் என்றார். மேலும் இது மாதிரி மணல் சூரிய குளியல் குளிப்பதால் எலும்புகள் வலுப்பெற்று, உடல் உஷ்ணம், மன அழுத்தம் குறைவதாகவும் தெரிவித்த அவர் இதுபோன்ற விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டிலிருந்து வீடியோ கேம், செல்போன் மூலம் விளையாண்டு மனதளவில் பாதிக்கப்படுவதை தவிர்த்து இதுபோன்ற கடற்கரை பகுதிகளில் மணல் குளியலிட்டு விளையாடி மகிழ்வதால் குழந்தைகள் மனதளவிலிலும் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.