இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - திருமுருகன் காந்தி
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளதாகவும் திருமுருகன் காந்தி பேட்டி.
![இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - திருமுருகன் காந்தி Tamil Nadu Police should register murder case against Sri Lankan Navy: Thirumurugan Gandhi இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - திருமுருகன் காந்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/13/9cc5311e9192bb06eed35e3c631f42921723558782624571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மற்றும் கொலை செய்யும் இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி பேட்டி.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது சிறைபிடிக்கப்படுவது மற்றும் படகை மோதி கொலை செய்வதை கண்டித்தும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தூத்துக்குடியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபரால் நடத்தப்படும் தம்ரோ பர்னிச்சர் கடையை மே 17 இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட தம்ரோ பர்னிச்சர் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே வந்தனர்.. அவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து முழக்கம் இடாமல் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்களை கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்தி கொலை செய்து வரும் இலங்கை கடற்படை மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் . தமிழக காவல்துறை இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.. தூத்துக்குடியில் இந்த போராட்டம் நடைபெற்றது.. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தம்ரோ கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், அந்தக் கடைகளில் இனி தமிழர்கள் யாரும் எந்தவித பொருட்களையும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க இந்த போராட்டம் நடைபெறுவதாக கூறிய அவர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை விரைவில் நாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)